வலிகாமம் வடக்கில் 100 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கில் 4 ஆயிரத்து 436 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் 354 ஏக்கர் காணிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (ஜனவரி 15) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற காணி விடுவிப்புத் தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
யாழ்ப்பாணம், வலி.வடக்கில் பலாலி வீதிக்குக் கிழக்கேயும், மயிலிட்டியிலும், வலி.வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகளில் விடுவிக்கச் சாத்தியமானது என்று இனங்கண்ட பகுதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.
இந்த மாத இறுதிக்குள் 5 இடங்களில் 110 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் தெரிவித்தார்.
பலாலி வடக்கில் 13 ஏக்கர் காணிகளும், மயிலிட்டு வடக்கில் 18 ஏக்கர் காணிகளும், கே.கே.எஸ். பிரிவில் 28 ஏக்கர் காணிகளும், கீரிமலையில் 30 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறையில் 21 ஏக்கர் காணிகளும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.