பிரேசிலின் குவைபா நகரை கடுமையான காற்று தாக்கியதில், வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர தேவி சிலையின் கிட்டத்தட்ட 114 அடி உயர பிரதி ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இச்சம்பவத்தின் போது யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்காட்சி பதிவான காணொளிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தெற்கு பிரேசிலில் புயல்கள் வரிசையாக நகர்ந்தபோது, உணவு விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் நிறுவப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலையை பலத்த காற்று தாக்கியுள்ளது இந்தப் பிரதி சுமார் 114 அடி உயரம் கொண்டது மற்றும் பிரேசில் முழுவதும் ஹவான் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பல ஒத்த கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
உள்ளூர் அறிக்கைகளின்படி, அண்ணளவாக 24 மீட்டர் (78 அடி) அளவிலான மேல் பகுதி மட்டுமே இடிந்து விழுந்தததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் 11 மீட்டர் (36 அடி) பீடம் அப்படியே இருந்துள்ளது.
2020 ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிலை இருந்து வருவதாகவும், அதற்கு தேவையான தொழில்நுட்ப சான்றிதழ் இருப்பதாகவும் அதனை நிறுவிய நிறுவனம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாக்க அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குள் உடைந்த சிலையை அகற்ற சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது

