வீதியில் குப்பைகளைக் கொட்டுவோரால் விரக்தியடைந்த ஒருவர் எடுத்த முடிவால், அந்த வீதியில் குப்பைகளைக் கொட்டச் செல்பவர்கள் தெறித்து ஓடுகின்றார்களாம்.
யாழ்ப்பாணத்து வீதியோரங்களில் குப்பைகள் தாராளம். வீடுகளில் சேரும் குப்பைகளை பைகளில் கட்டி இரவுவேளைகளில் கொண்டு சென்று “நைஸாக” வீதியோரங்களில் கொட்டி விட்டு வருவதில் எம்மவர்களை அடிப்பதற்கு ஆளில்லை என்றே சொல்லலாம்.
இவர்களின் தொல்லைகள் தாங்காது பல வீடுகளின் கேற்றுகள், சுவர்களில் இதை வாசித்தாவது ரோசம் வந்து குப்பை போடாது செல்லட்டும் என்ற நப்பாசையில் இவ்விடத்தில் குப்பை போட வேண்டாம் என்பது முதல் பற்பல வாசகங்கள் எழுதியிருப்பதைக் காணலாம். ஆனால் வீதிகளில் குப்பைகளைப் போட்டுச் செல்பவர்கள் அவை எவற்றுக்கும் அசராது தங்களின் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியில் உள்ள வீடொன்றின் உரிமையாளரும் இவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார் போல. விரக்தியடைந்து பொறுமையிழந்த அவர் எடுத்த விநோத முடிவால் இப்போது அவர் வீட்டுக்கு முன்பாக மட்டுமல்ல, அந்த வீதியில் குப்பை போடுவதற்கே பயப்படுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவர் வேறொன்றும் செய்யவில்லை. தனது வீட்டுக்கு முன்பாக ஒரு அறிவித்தலைத் தொங்கவிட்டு அதன் அருகில் ஒரு பொம்மை, படம் கீறப்பட்ட உலோகத் தகடு என்பவற்றை மட்டுமே தொங்க விட்டுள்ளார். அதில் உள்ள வாசகம்தான் அனைவரையும் தெறித்து ஓட வைக்கின்றதாம். “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” இதுதான் அதில் உள்ள வாசகம்.