நாவாந்துறையில் சிறுவர்களைக் கடத்த முயன்றார் என அந்தப் பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவாந்துறையில் நேற்று(மே 16) காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
நேற்று கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட குழு கார் மற்றும் மோட்டார் வண்டிகளில் முகங்களை மறைத்தவாறு கத்திகளுடன் வந்து மிரட்டி சிறுவனைக் கடத்த முற்பட்ட வேளை குறித்த சிறுவன் தப்பியோடிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக அழைத்துச் செல்ல முட்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள சிசிரிவி காட்சிகளில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வீதியிலுள்ள ஏனைய சிசிரிவி காட்சிகளை பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.
அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் தொடர்பாக பல கருத்துக்கள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.