முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (ஜூன் 26) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30 மணிக்கு இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கனியவளங்கள் கடத்தல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும், கனிய வளங்களை கொண்டுசெல்வதற்கான அனுமதிபத்திரம் பெற்றுள்ளமை, அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களின் மீள் பரிசீலணைக்குட்படுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தின் புவியியல் சாதக பாதக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னரே கனியவளங்கள் அனுமதி சார்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே மண், கல் அகழ்வுகளை மேற்கொண்ட பகுதிகளில் புணர்நிர்மானப் பணிகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என பணிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி ), புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட சுற்றுச்சூழல் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கனியவளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், வனவள திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.