முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(ஜூன் 19) பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது.
வட மாகாணத்தில் தற்போது அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை, வன்முறையும் மோதல்களும், தற்கொலை, கல்வியில் இடைவிலகல் , சிறுவர் தொழிலாளர்கள் எனப் பல்வேறு நிலைகளில் சிறுவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் சிறுவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு இதன் தாக்கம் சமூகத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.
எனவே இவற்றில் இருந்து இளம் சமூகத்தினை நேரிய வழியில் மீட்டெடுக்கும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
அதிபர்களின் வழிப்படுத்தலுடன் அனைத்து பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதனோடு இணைந்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல், சிறுவர்களின் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்தலை எவ்வாறு மேற்கொள்ளல், மாற்றுத்திறனாளிகளின் கல்விச் சூழலை சிறந்ததாக உருவாக்குதல் முதலான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் திரு.வாசுதேவா, உளநல வைத்தியர் நிபுணர் திரு ஜெகரூபன், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், முல்லை வலய பாடசாலையின் அதிபர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.