நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் நேற்று (ஜூன் 19) வழங்கி வைக்கப்பட்டன.
மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு கமத் தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் பயறு மற்றும் உளுந்து விதைகள் வழங்கப்பட்டன.
மன்னார் பிரதேச பகுதிகளைச் சேர்ந்த 140 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு 130 விவசாயிகளுக்கு பயறு விதைகளும் 10 விவசாயிகளுக்கு உளுந்து விதைகளும் நேற்று மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்தில் காலை 9.30 மணி அளவில் வைபவ ரீதியாக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் கலந்து கொண்டு குறித்த விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்தனர்.
இவ்வாறு மாந்தை மேற்கு, மடு, நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.