மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவையும் புறக்கணிக்கப்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினையும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அனலைதீவு பிரதேச மக்கள் பொது அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் என ஒன்றிணைந்து இன்று (ஜூன் 25) தமது பிரதான போக்குவரத்து மார்க்கமான இறங்குதுறையின் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விரிவாக்கம் கருதி தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று (ஜூன் 25) காலை 6 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் குறித்து தெரியவருகையில் –
அனலைதீவு மக்கள் தமது இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக கொண்டு கடலரிப்பால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, அனலைதீவு ஐயநார் கோயில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ஆலயத்தில் அகற்றப்படும் இடிபாடுகளை அனலைதீவு இறங்குதுறையின் கரையோர பகுதியில் கொட்டிவருகின்றனர்.
கொட்டப்படும் இடிபாடுகளால் இறங்குதுறையின் இரு கரைப் பகுதியும் சற்று அகலமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சில அரசியல் சுயநலவாதிகளால் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை காரணம் காட்டி கொட்டப்பட்ட இடிபாடுகளால் கடல் பகுதி நிரவப்படுவதாக தெரிவித்து துறைசார் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த திணைக்களம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் கொட்டப்பட்ட இடிபாடுகளை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்தே அனலைதீவு மக்கள் பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தமது இறங்கதுறையின் நலன்களை கருத்திற்கொண்டு தாம் முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டை தடுத்தைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போக்குவரத்தை முடிக்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
அத்துடன் குறித்த இறங்குதுறையின் பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை அவரது யாழ் மாவட்ட பிரதிநிதிகளிடம் கையளித்திருந்தனர்.
குறித்த கோரிக்கையை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கூறியுள்ளதுடன் விரைவில் தான் நேரில் வருகைதந்து அனலைதீவு மக்களின் இறங்குதுறை குறித்த பிரச்சினைகள், அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் கிடைக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது