மலையகத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், 1966 ஆம் ஆண்டில் வவுனியாவில் குடியேறியவரும், வவுனியாவின் மணிபுரம் எனும் கிராமத்தின் பெயருக்கு உரியவருமான எழுத்தாளர் கலாபூசணம் இரா. சுப்பிரமணியம் எழுதிய ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ நூலின் அறிமுக விழாவானது நிறைந்த மக்கள் பங்கேற்போடு இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 20) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஈழத்தின் வன்னி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வுக்கு சமூகச் செயற்பாட்டாளர் மாங்குளம் பழனியாண்டி நாகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும், ஐ.பி.சி சி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் அவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் பங்கேற்றார்.
தொடக்க நிகழ்வாக நூலாசிரியரும், விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகள் இசைத்தனர். வரவேற்புரையினை சிவகுமார் திலகேஸ்வரி நிகழ்த்தினார். தலைமை உரையினை பழனியாண்டி நாகேந்திரன் நிகழ்த்தினார்.
வாழ்த்துரையினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் நிகழ்த்தினார். ‘மலையக பகுதிகளில் பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதவை’ என அவர் குறிப்பிட்டார்.
ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் தனது உரையில் ‘மலையக மக்கள் இப்பொழுது பெரு வளர்ச்சியை கண்டு வருவது மகிழ்ச்சி தருகின்றது’ என்று குறிப்பிட்டார்.
நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் வழங்கி வைக்க முதலாவது பிரதியினை ஐபிசி குழுமத் தலைவர் கந்தையா பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் நூலினை பெற்றுக் கொண்டனர்.
நூலின் ஆய்வுரையினை இலக்கிய விமர்சகரும், கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபருமான பெருமாள் கணேசன் நிகழ்த்தினார். மலையக மக்களின் வரலாறு மாணவர்களுக்கான வரலாற்றுப் பதிவாக அறிமுகம் செய்து வைக்கப்படுவதில் நாம் வெற்றி பெறவில்லை என்பதை அவர் பதிவு செய்தார்.
இந்த நூலின் ஆசிரியர் இரா. சுப்பிரமணியம் அவர்கள் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சில காரணங்கள் கருதி நாடாளுமன்றத்திற்கு செல்வதை தவிர்த்துக் கொண்டவர் என்றும், இவருடைய பெயரினால் வவுனியாவில் ஒரு கிராமம் இருக்கின்றது என்பதையும் யோ.புரட்சி தனது தொகுப்புரையில் குறிப்பிட்டார்.
‘மலையக மக்கள் வடக்கு கிழக்கு எங்கும் பரந்து வாழ்கின்றனர் அவர்கள் மலையகத்துக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்கும் பாதுகாப்பாக உள்ளனர்’ என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். ‘மலையக மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு விரைந்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதே எமது அவா’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
‘மலையக மக்களுக்கு தேவை அனுதாபம் அல்ல நியாயமே’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனதுரையில் குறிப்பிட்டார்.
‘இன்று புகழ் பெற்றுள்ள பாடகி ஆசானி மலையகத்தின் இளைய திறமையின் சான்று’ என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டார்.
ஏற்புரையினை நூலாசிரியர் இரா. சுப்பிரமணியம் வழங்கினார். இவ்வளவு நிறைந்த மக்களோடு மலையக வரலாறு வெளியீடு செய்யப்படுவது மனமகிழ்ச்சி அளிப்பதாக நூலாசிரியர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் 310 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதி உதவியினை சமூகச் செயற்பாட்டாளர் நாகரூபன் அவர்கள் வழங்கி இருந்தார். நன்றியுரையினை சுப்பிரமணியம் சசிகாந் வழங்கினார்.