நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சித் பணிமனையின் ஏற்பாட்டில் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் உள்ளூராட்சிபணிமனை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நயினாதீவில் உள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கிராம மக்களால் எடுத்துக் கூறப்பட்டது. பாடசாலைகளுக்கான தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் தீர்வு காண்பதற்கான திட்டவரைவை சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார். தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,புலம்பெயர் அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆளுநர் குறிப்பிட்டார்.
இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. இன,மத பேதமின்றி நயினாதீவு மக்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தமையானது இந்தப் பிரதேசத்தை சிறந்த முன்மாதிரியாக மாற்றுவதற்கான நல்லதொரு ஆரம்பம் என ஆளுநர் தெரிவித்தார்.
மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர் நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டப நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவிலும் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். தீவிலுள்ள மதவழிபாட்டுத்தலங்களுக்கும் சென்று மதத்தலைவர்களுடனும் ஆளுநர் கலந்துரையாடினார். இதேவேளை ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை உடனடியாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நயினாதீவை முன்மாதிரித் தீவாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பித்து அதற்குரிய திட்டவரைபை விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதாகவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன் நயினாதீவு மக்களிடம் உறுதியளித்தார்.