பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 17) நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் க. ஸ்ரீமோகனனின் தலைமையில் இடம்பெற்றது.
திருவிழாவானது எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 ஆம் திகதி நற்கருணை வழிபாடும், பவனியும் நடைபெற்று, 11 ஆம் திகதி திருவிழா திருப்பலியுடனும், புனிதரின் திருச்சுரூப ஆசீருடனும் இனிதே நிறைவுபெறவுள்ளது.
அந்தவகையில் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய 128 ஆம் ஆண்டு திருவிழாவை சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக திருவிழா காலங்களில் திருத்தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான பொது வசதிகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பொதுமக்களுக்கான குடிநீர் வசதிகள், போக்குவரத்து, மலசலகூட வசதிகள், பொதுசுகாதார வசதிகள், ஆலய சுற்றாடல் துப்பரவுப் பணி, வைத்திய வசதிகள், முதலுதவி, பொலிஸ் பாதுகாப்பு, ஆலய பகுதிகளுக்கான மின்சார வசதி, போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் உற்சவகாலப் பணிமனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆலோசிக்கப்பட்டதோடு முடிவுகளும் எட்டப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் ஜெ.றெமின்ரன், பூநகரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர், கிளிநொச்சி மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஆர். எச். சகாயநாயகம் அடிகளார், பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி லியான்ஸ் ஜான் அடிகளார், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சில்வெஸ்டர்தாஸ் அடிகளார், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிமணை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாலைதீவு அந்தோனியார் ஸ்தலம், தவக்கால யாத்திரை ஸ்தலமாக விளங்குவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தவக்கால தியானத்திற்காகவும், திருச்சிலுவைப்பாதை தியானத்திற்காகவும், தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காகவும் அங்கு சென்று தூய அந்தோனியாரின் பரிந்துரையால் இறையருள் பெற்று செல்வதும் குறிப்பிடத்தக்கது.