நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுன் 19 ஆம் திகதி (நாளை ) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
திருவிழா காலப்பகுதியில் அம்பாளைத் தரிசிக்கவரும் அடியார்கள் ஆலயத்தின் புனிதத்தன்மையை பேணிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றோம் என நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவர் கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நயினாதீவில் தற்காலிக பொலிஸ் நிலையம் மற்றும் நடமாடும் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. பயணிகளின் நலன்கருதி படகு மற்றும் பேருந்து சேவைகளும் அதிகளவில் இடம்பெறவுள்ளது.
ஆலயத்துக்கு வரும் அனைவரும் ஆசாரசீலர்களாக வருதல் வேண்டும். ஆலய மற்றும் உள்வீதியில் தொலைபேசிப் பாவனை புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் செய்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் பாதணிகளுடன் செல்லுதல் மற்றும் உலாவுதல் ஆகாது. அடியார்கள் ஆபரணங்கள் அணிந்து வருவதை தவிர்ப்பது நல்லது.
ஆலயத்திற்கு வரும் பெண்கள் தமிழ்ப்பண்பாட்டு கலாசார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆண்கள் மேற்சட்டை அணிந்து ஆலயத்தினுள்ளும் புறமும் வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் திரு .அ.சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது பல முடிவுகள் எட்டப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள் தரச் சான்றிதழை கட்டாயம் பெற்றுக்கொள்வதுடன், படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையையும் உறுதிப்படுத்துவதுடன் தாழ்வுப்படகுகள் ஏணிப்படி வசதி அமைத்தலை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரை கைது செய்தல், கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, கடற்போக்குவரத்து நேரத்திற்கமைய தரைப்போக்குவரத்தை ஏற்படுத்தல், வாகனத்தரிப்பிடம், படகுகளில் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தரை மற்றும் கடற்போக்குவரத்து நேரஅட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு , படகுகளில் மோட்டாா் வாகனங்களை ஏற்றும்போது பிரதேசசெயலரிடம் அனுமதி பெறல், யாசகம் பெறுவோர் உள்வருவதை தடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
கடைகளுக்கு பிரதேச சபையின் அனுமதி, நடமாடும் வைத்திய சேவை ,சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன-என்று அவர் தெரிவித்தார்.