சுகாதார நடைமுறைகளும் சட்ட ஏற்பாடுகளும் மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதனால் அவை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி போத்தல் மூலம் கள்ளு விற்பனையில் ஈடுபட முடியும் எனவும் தெரிவித்தார்.
தீவகப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளினை விற்பனை செய்வதில் காணப்படுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொறோனா பரவல் காரணமாக அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்ற இறுக்கமான சுகாதார நடைமுறைகள் காரணமாக, கள்ளு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், மக்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவற்கு அனுமதிக்கப்பட வேணடும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார நடைமுறைகள் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களும் இன்றி பின்பற்றப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தீவகத்தினை சேர்ந்த பனை தென்னை வளச் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலை தொடர்ந்து நாளை தொடக்கம் கள்ளு விற்பனை நிலையங்களை திறந்து போத்தலகளில் கள்ளு விற்பனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.