கச்சதீவு திருவிழா நேற்று ஆரம்பமான நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு தளர்த்தப்பட்ட நிலையில் கச்சதீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
திருவிழா நேற்று (மார்ச் 3) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் இலங்கை மற்றும் தமிழக பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அந்தோனியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குத்தந்தை எமலி போல் ஏற்றி வைத்தார். தொடர்ந்து சிலுவைப் பாதை நடைபெற்றது.
2ஆம் நாளான இன்று (மார்ச் 4) யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும். விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள்.
கச்சதீவு திருவிழாவை முன்னிட்டு இராமேஸ்வரம் கடல் பகுதியில் நாளை 5 ஆம் திகதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நன்றி – தினக்குரல்