யாழ். மாவட்டத்திலேயே முதன்முறையாக மாற்று வலுவுடையோருக்கான கலை இலக்கிய விழா இன்று (மார்ச் 16) வியாழக்கிழமை யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்த்திலுள்ள மாற்றாற்றல் உடையோர்களை உள்ளடக்கிய அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விழா பிரதேச செயலகத்தில் புதிதாக மாற்றாற்றலுடைய கலைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திறந்த வெளி அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக வடக்கு ஆளுநரின் செயலாளர் பொன்.வாகீசனும், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.நந்தகுமாரும் கலந்துகொண்டனர்.
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் ஆசியுரை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைக்க நவீல்ட் பாடசாலை மாணவர்கள் வரவேற்பு நடனத்தை வழங்கி சிறந்த கலை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களின் பாடல் மற்றும் நடனம், சிவபூமி மாணவர்களின் குழு நடனம், வாழ்வக மாணவர்களின் கவிதையும் கானமும் மற்றும் வாத்திய விருந்து, கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய மாணவர்களின் குழு நடனம் மற்றும் பாடல், நவீல்ட் பாடசாலை மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சி மற்றும் அந்தப் பாடசாலை ஆசிரியர்களின் நாடகம், விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினரின் பாடல் மற்றும் தனி நடனம், பேச்சு ஆகிய கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் விழா ஏற்பாட்டர்களால் வழங்கப்பட்டன.