“சாவு சுமந்த முல்லையில் சரித்திர நாயகன் உயிர்ப்பு” திருப்பாடுகளின் காட்சி நேற்றுமுன்தினம் (மார்ச் 17) மாலை 7.30 மணியளவில் முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்திலே மேடை ஏற்றப்பட்டது.
முல்லைப் பங்கு கலாசார குழாமின் ஏற்பாட்டிலே நடைபெற்ற திருப்பாடுகளின் காட்சி 100க்கும் அதிகமான நடிகர்களுடன் 170 அடி பிரமாண்ட மேடையில் அரங்கேற்றப்பட்டது.
இத்திருப்பாடுகளின் காட்சியானது முல்லைப்பங்குத்தந்தை அருட்பணி அகஸ்ரின் அடிகளாரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.
நாடகத்தின் ஆரம்பம் 2004ஆம் ஆண்டு முல்லை மண்ணை புரட்டிப்போட்ட சுனாமியோடு ஆரம்பித்து 2009 போரோடு சிதைந்து 2021ல் கொரோனாவின் கோர தாண்டவத்திலே சிக்கி தற்போது போதை என்ற அரக்கனின் கைகளிலே கரித்துண்டுகளாகக்கப்பட்ட காட்சி முறையே காட்சிப்படுத்தப்பட்டன.
கிறிஸ்துவின் பிறப்பு இசைநாடகம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. பின் சின்ன யேசுவின் போதனை, திருமுழுக்கு, இயேசு சாத்தானால் சோதிக்கப்படல், சீடர்களை அழைத்தல், மலைப்பொழிவு, புதுமைகள், ஓசாண்ணா, சதித்திட்டம், இராப்போசனம், இயேசுவின் கைது, தலைமைச்சங்கம், பிலாத்து, கற்றூண், பரபாஸ்விடுதலை, சிலுவைப்பாதை, உயிர்ப்பு என்று திருப்பாடுகளின் காட்சி வடிவமைப்பட்டுள்ளது.
இந்த திருப்பாடுகளின் காட்சிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்
யா.மறைமாவட்ட குருமுதல்வர், முல்லை மறைக்கோட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சிறப்பு விருந்தினர்கள், மக்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.