காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் ஊடாகவே வெளிப்படுத்த முடியும். காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை அதிகாரிகள் கடந்தவாரம் எமக்கு அறிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் அடையாளம் பற்றிய தகவல்கள் எம்மிடம் இல்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(ஓகஸ்ட் 30) தெரிவித்தனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியாவில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்ட்டுள்ளனர்.
இறுதிப்போரின்போது இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழ்க் குழந்தைகள் தெற்கில் பல இடங்களில் உள்ளனர் என்ற சந்தேகத்தை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்ப்டடுள்ளனர் என்று கடந்தவாரம் அதிகாரிகள் எங்களுக்கு அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கூறும் அடையாளங்கள், தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை. ஆனால் இதன்மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு உள்ளார்கள் என்பது உறுதியாகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதன் ஊடாகவே வெளிப்படுத்த முடியும் – என்றனர்.