முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித உடல் எச்சங்கள் தென்பட்ட பகுதியில் இன்று அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்தும் மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுன்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 29ஆம் திகதி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட வேலைகளின்போது மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கனரக இயந்திரம் கொண்டு அந்தப் பகுதியை அகழ்ந்தபோது பல மனித உடல் எச்சங்கள், தடயப் பொருட்கள் தென்பட்டதை தொடர்ந்து அகழும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டது. சுமார் 20 அடி நீளம் கொண்ட பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று மாலை வரை 13 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாலை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
அந்தப் பகுதியை பாதுகாப்பும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.