பூநகரி கௌதாரி முனை காற்றாலை மூலமான அனைத்து அனுகூலங்களும் அப்பகுதி மக்களுக்கே கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கௌதாரிமுனை கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தியுடன் தொடர்பு பட்டு அங்கு இடம்பெறவுள்ள அபிவிருத்தி முன்னேற்றங்கள் மீதான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கௌரவ அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த காற்றாலை மின் உற்பத்தியை முன்நிறுத்தி அங்கு இடம்பெறவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்களை அவர் மேலும் விபரிக்கையில்,
இங்கு வாழும் மக்களுக்கு ஏனைய இடங்களுக்கான போக்குவரத்து பெரும் பிரச்சனையான ஒன்றாக இருப்பதால் முதல் நடவடிக்கையாக வீதி அபிவிருத்தி மேலான கவனத்தில் கொள்ளப்படும். இம்மக்களுக்கான தொழில் மற்றும் வாழ்வாதாரம் என்பது மேலான கவனத்துக்குரியது .
எனவே காற்றாலை மூலமாக கிடைக்கும் ஒரு பகுதி இலாபத்தில் இம்மக்களின் கடலுணவு உற்பத்திக்காக நாம் அதனை முன்னுரிமைப்படுத்த வுள்ளோம்.
அவ்வாறே கல்வி சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஒதுக்கீடுகள்
பயன்படுத்தப்படும். இக்கிராமத்தின் இறங்குதுறைகளை அண்டியுள்ள பகுதிகள் சிறந்த சுற்றுலா பயணிகள் தளமாக இனங்காணப்பட்டுள்ளமையால் எதிர் காலத்தில் இதனை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
இங்குள்ள மீனவர்களுக்கான கடல் எல்லையை வரையறுப்பதில் நிலவும் இருதரப்பு முரண்பாடுகள் மீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள்,
இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள கடல் எல்லைகள் இருதரப்புக்கும் பொதுவானவை. இந்த எல்லைகளை அனுசரித்து செயற்படுவதற்கான ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் இரு பகுதி கடற்றொழிலாளர் களின் நலன்களை கவனத்தில் கொண்டே வரையறுக்கப்பட் டுள்ளன.
இதில் பிரதேச வாதம், சாதி பேதம் மற்றும் இனமத ரீதியான எந்தபாகுபாடுகளும் எமக்கு கிடையாது. இருதரப்பு தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் கடலில் பயணிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும் என்றார்.