புளொட் – ரெலோ அமைப்புகளுக்குடையேயான கனவான் ஒப்பந்தத்திற்கமைய கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இதுவரையிலும் கடமையாற்றிய புளொட் அமைப்பின் தோழர். கனகையா தவராஜா அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ அமைப்புகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டிருந்த தேர்தல் கால உடன்படிக்கைக்கமைவாக, தனது தவிசாளர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
இதையடுத்து 22.04.2021 இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில், சபையின் மீதிக் காலத்திற்கான புதிய தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதில் ரெலோ அமைப்பைச் சேர்ந்த கமலநாதன் விஜிந்தன் சபையின் 24 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவைப் பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக பதவியேற்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 1 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1 உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் 1 உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 1 உறுப்பினரும் புதிய தவிசாளருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.