தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிர்ணய வரைவு அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதையும், அதுதொடர்பில் மக்களிடத்தே அதிருப்தி நிலவுவதையும் அவதானிக்க முடிகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடைய ஆலோசனைகள் எவையும் பெறப்படாமலேயே இவ் எல்லை மீள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மக்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான நிலத்தொடர்பு, நிர்வாகத் தொடர்பு, சமூக ஊடாட்டங்கள், போக்குவரத்து உள்ளிட்ட காரணிகள் கருத்திற்கொள்ளப்படாமை மாவட்டத்தின் சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரத்தன்மையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய பாதிப்புக்கள் தொடர்பில், அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புக்கள் தங்களின் எழுத்துமூல பரிந்துரைகளை, எல்லை மீள் நிர்ணயக் குழுவின் மாவட்டத் தலைவரான அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு, தேசிய எல்லை நிருணய ஆணைக்குழுவின் தவிசாளருக்கு பிரதியிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைப்பதன் மூலம், உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் எனத் தெரிவித்தார்.