கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள உருத்திரபுரம் உருத்திரபுரீசுவரர் ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஆலயத்தின் பழைமையையும், புனிதத்தன்மையையும் இயல்புகெடாது பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இன்றையதினம் (மே 13) அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
ஏற்கனவே 2021.03.22 ஆம் திகதி இவ் ஆலயத்தில் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முனைந்த தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளை, ஆலய நிருவாகத்தினரும், மக்களும் இணைந்து அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அதேவேளை கடந்த 2021.03.24 ஆம் திகதி இவ்விடயத்தை ஓர் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையாக நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பிரஸ்தாபித்திருந்தேன்.
அதன்பின்னர் 2023.05.11 ஆம் திகதி நடைபெற்ற தங்களுக்கும் எமக்கும் இடையிலான சந்திப்பின்போது தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக தாங்கள் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக மீறுவதாகவும் இவ்வாலய விவகாரம் அமைந்துள்ளது.
இந்த நாட்டில் இன நல்லிணக்கம், மதப் பிரிவினையின்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தாங்கள், உருத்திரபுரீசுவரர் ஆலயத்தை அகழ்வு என்றபேரில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்தவும், தமிழர்களின் இன, மத, மொழி, மரபுரிமை அடையாளங்கள் மீதான சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு இக் கடிதத்தை சமர்ப்பிக்கிறேன் – என்றுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 2023.05.15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பில் இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதியிடம் நேரில் கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.