இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், எதிர்வரும் ஒக்ரோபர் 8 ஆம் திகதி திறக்கப்படவிருக்கிறது.
அட்லாண்டிக் கடற்பகுதியிலிருந்து சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவில் உள்ள வடகிழக்கு மாநிலம் நியூ ஜெர்சி.இம்மாநிலத்தின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆனது.
நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லே டவுன்ஷிப் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அக்ஷர்தாம் திருக்கோவில், அங்கோர் வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாகும்.
இத்திருக்கோவிலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.சுண்ணாம்பு, கிரானைட், இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு உள்ளிட்ட கிட்டத்தட்ட 20 லட்சம் (2 மில்லியன்) கன அடி கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி மற்றும் சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை கொண்டுவரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிட் வடிவ கோபுரங்கள் உள்ளன.
இது பாரம்பரிய கட்டிடக்கலைகளின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடத்தையும் கொண்டுள்ளது.பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் அமெரிக்காவின் தனித்துவமான அடையாளமாக காணப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.