யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர். எனினும் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்களை தொடர்ச்சியாக தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் சுய தனிமைப்படுத்தப்படுபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலிருந்து சுகாதார பிரிவினரால் படிப்படியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் ஏற்கனவே தொற்று அச்சம் காரணமாக முடக்க நிலையில் இருந்த மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய சுமார் 600 குடும்பங்கள் இன்றைய புள்ளி விவரத்தின் படி சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தோரின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகவே காணப்படுகின்றது.
யாழில் பொதுமக்கள் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அநாவசியமற்ற பயணங்களை தவிர்த்து ஒன்று கூடல்களையும் தவிர்ப்பதன் மூலமே யாழ்.மாவட்டத்தில் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.