பாடசாலைகள் அனைத்தும் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதும் வரும் போதும் பொதுப்போக்குவரத்தைத் தவிர்த்து தனியான வாகனங்களில் போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க. இளங்கோவன் தெரிவித்தார்.
பொதுப்போக்குவரத்தின் மூலம் பல பலதரப்பட்டவர்களும் பயணம் செய்வதால் தேவயைற்ற அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இயலுமானவரைப் பொதுப் போக்குவரத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் தேசிய கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் 6 – 13 வரையான மாணவர்களுக்காகவே பாடசாலைகள் தற்போது ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து நிலமை ஆராயப்பட்டு மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கமைவாக ஆரம்பப்பிரிவுகள் ஆரம்பமாகும். எனவே தற்போதைய நிலவரத்துக்கமைய குறிப்பிட்ட தரங்களைச் சேர்ந்த மாணவர்களே பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவர். இந்த நடமுறை அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் பொருந்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.