நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி நகரத்தின் மூத்த குடிமகனாகவும் திகழ்ந்து, இறுதியில் இருபது ஆண்டுளாகக் கனடாவில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார் பெருமதிப் புக்குரியமாமகனார் திரு. கார்த்திகேசு நாகலிங்கம் அவர்கள். ஒரு மானுடப்பிறவியில் ஒருவருக்குண்டான கடமைகள் அத்தனையையும் சிறப்புற நிறைவேற்றி, மகத்துவம் மிக்க வாழ்வை வாழ்ந்தவரே இந்தப் பேராசான். அவர் கிளிநொச்சி மண்ணிலே ஆற்றிய சேவைகள் சிலவற்றை இக்கட்டுரை சுருக்கமாகத் தருகின்றது.
1930-ம் ஆண்டில் நெடுந்தீவில் பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை அங்கு முடித்துக்கொண்டு, பின் ஆசிரியர் கலாசாலையில் பயின்று 22-வது வயதில் ஆசிரியரானார்.
இரணைமடுக்குளம் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு, நீர் பாய் வதற்கான கால்வாய்கள் உருத்திரபுரம் வரை வெட்டப்பட்ட பின்னர், கிளிநொச்சியில் குடியேற்றங்கள் தொடங்கின.
இரணைமடுக் குளத்தில் இருந்து உருத்திரபுரம் வரை பத்து கிளை வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் முதலாம் வாய்க்கால், இரண்டாம் வாய்க்கால் எனப்பெயரிடப்பட்டு, பத்தாம் வாய்க்கால் உருத்திரபுரத்தில் நிறை வடைந்தது. இந்த வாய்க்கால்களை அண்டி மக்களுக்குக் குடியிருப்பு நிலங்கள் வழங்கப்பட்டன. முதல் குடியிருப்பு கணேசபுரத்திலும் இரண்டாம் குடியிருப்பு உருத்திரபுரத்திலும் உருவாக்கப்பட்டன. இவ்விடங்களில் சிறுகச் சிறுக மக்கள் குடியேறினர். நுளம்புக்கும் பாம்புக்கும் அஞ்சிய மக்கள் பலரும் முதலில் குடியேற தயங்கினர்.
ஏழாம் வாய்க்காலில் கிளிநொச்சியின் முதலாவது பாடசாலை 1952-ல் கட்டப்பட்டது. இந்தப் பாடசாலையின் முதலாவது ஆசிரியராக தனது 22-வது வயதில் கற்பிக்கத் தொடங்கியவர் தான் திரு. க. நாகலிங்கம் அவர்கள்.
கற்பிப்பதற்காகக் கிளிநொச்சிக்குச் சென்ற இவர், அங்கு கட்டடத்தையும் கதிரை, மேசைகளையும் கண்டாரேயன்றி, மாணவர்களைக் காணவில்லை. பின்னர் வீடு வீடாகச் சென்று திரட்டியதில் எட்டு மாணவர்கள் மட்டுமே கிடைத்தார்கள். அவர்களோடு தன் கற்பித்தல் பணியைத் தொடங்கினார் ஆசிரியர் நாகலிங்கம்.
வளர்ச்சியற்ற, புத்தம் புதிதாக மக்கள் குடியேறியதொரு நிலத்தில் ஆற்றும் ஆசிரியப் பணி கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக் கூடியது அல்ல. பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் குடும்பச் சூழல்களும் நன்றாக இருந்தால்தான் பிள்ளைகளின் கல்வி சிறக்கும். இதை உணர்ந்த ஆசிரியர் அச்சூழலில் வாழும் மக்களின் தேவைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அச்சூழலுக்குள் புதிதாக மக்களைக் குடியேற்றுவதிலும் அக்கறை செலுத்தினார். தொடக்கத்தில் பலரும் குடியேற அஞ்சிய இடங்களில் கணிசமான மக்கள் குடியேற உதவினார். அவரும் உருத்திரபுரத்தில் தனது நிலையான குடியிருப்பை அமைத்துக்கொண்டார்.
சிறுவயதிலேயே தமிழ் மொழி மீதும் இனம் மீதும் பற்றுக் கொண்ட திரு. நாகலிங்கம், தந்தை செல்வா தொடங்கிய தமிழரசுக் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடைய கட்சி அரசியல் ஈடுபாடு, அச்சூழலில் வாழ்ந்த மக்களின் வாழ்வுக்கும் உதவியது.
இவர் துடிப்புமிக்க இளைஞராகத் திகழ்ந்தார் என்பதற்கான சான்று வியப்பைத் தருவதாக உள்ளது. 1957-ம் ஆண்டில் இவரும் நண்பருமாகப் 14 நாட்களில் சைக்களில் இலங்கையைச் சுற்றி வந்திருக்கின்றார்கள் என்றால் நம்ப முடிகின்றதா?
இன்று பலரும் தமிழ்வழித் திருமணம் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் திரு. நாகலிங்கம் அவர்கள், 1957-ல் பிராமணரும் சமயச் சடங்குகளுமற்ற திருமணத்தை திருக்குறளை முன் வைத்துச் செய்துள்ளார். சமயப் பற்றாளராகத் திகழ்ந்த இவர், வடமொழி சார்ந்த ஆளுகையைத் தவிர்த்தே வந்திருக்கின்றார்.
1960-ம் ஆண்டு வரையில் சாவகச்சேரி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த கிளிநொச்சி, 1960 முதல் தனித்த தேர்தல் தொகுதியாகியது. அவ்வேளை, தமிழரசுக்கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய ஏ. சிவசிதம்பரம் அவர்கள் வெற்றிபெற உதவினார் திரு. நாகலிங்கம்.
1957-ம் ஆண்டு மற்றுமொரு கிளிநொச்சிப் பகுதி பள்ளியான பன்னங்கட்டி வித்தியாலத்துக்கு மாற்றலானார். அங்கிருந்து தொடர்ந்து பணி மாற்றங்களைச் சந்தித்தாலும் நெடுத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கிளிநொச்சியையே தன்னுடைய நிலையான வதிவிடமாகக் கொண்டார்.
மீண்டும் கிளிநொச்சி இந்து மகாவித்தியாலத்துக்குத் திரும்பிய இவர், தன் சமூகப் பணிகளை விரிவாக்கினார். ஏழாம்வாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த குருகுலம், மகாதேவா ஆச்சிரமம், காந்தி நிலையம் போற்றவற்றோடு நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். ஆலயங்களை மீள்கட்டமைப்புச் செய்வதிலும் நூலகங்களை அமைப்பதிலும் விளையாட்டுகளில் இளையோரை ஈடுபடுத்துவதுமாக சமூகச் சான்றாமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
பள்ளி முதல்வர் பணியினூடாக, அரும்பெரும் கல்விச் சேவைகளை இவர் ஆற்றியிருப்பினும் கிளிநொச்சியில் இவர் ஆற்றிய சமூகப் பணிகளே பெரிதும் பேசப்படுவனவாக உள்ளன. எனது தந்தையாராகிய திரு. பொன்னையா 1950-ம் ஆண்டுக்கு முன்னரே கிளிநொச்சியின் முதல் விதானையாரான திரு. வெற்றிவேல் என்பவரின் உதவியாளராகக் குடியேறியவர். என் தந்தையும் திரு. நாகலிங்கம் அவர்களும் தொடக்கத்திலிருந்தே தமக்குள் அறிமுகமானவர்கள். எனது தந்தையார் பொதுவுடமைக் கொள்கை மிக்கவர் என்ற வகையில் இருவரும் அரசியலில் ஒன்றியைந்து இயங்காவிடினும் சமூகப் பணிகளில் இணைந்து இயங்கியிருக்கின்றனர். கரைச்சி தெற்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயங்குனர் அவையில் இருவரும் நீண்டகால உறுப்பினர்கள். திரு. நாகலிங்கம் அவர்கள் தலைவராகவும் சிலபொழுதுகளில் எனது தந்தையார் துணைத் தலைவராகவும் இருந்துள்ளனர்.
இவர் தலைவராக இருந்த காலத்தில் கூட்டுறச்சங்கம் பெருவளர்ச்சி கண்டது என்பர். பல்வேறு கிராமங்களிலும் கூட்டுறவுக் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்குக் கூப்பன் ஊடாகப் பொருட்கள் கிடைக்க வழிகள் ஏற்பட்டன.
1965-ல் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திரு. கா.பொ. இரத்தினம் களம் இறங்கி வெற்றிபெற்றபோது அவருக்குத் துணையாகத் திகழ்ந்தவர் திரு. நாகலிங்கம். இக்காலப்பகுதிகளில் கிராமசபைத் தேர்தல்களில் வெற்றிபெற்றுப் பல பதவிகளை வகித்திருக்கின்றார். சிறந்த பேச்சாளரான இவர், அரசியல் கூட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் முதன்மைப் பேச்சாளராகத் திகழ்ந்திருக்கின்றார்.
கிளிநொச்சியில் தொடங்கப்பட்ட இரண்டாம் குடியேற்றத்திட்டம் உருத்திரபுரம். இந்த உருத்திரபுரம் என்ற கிராமத்தை வடி வமைத்தவர் திரு. நாகலிங்கம் எனத் துணிந்து கூறலாம்.
இவருடைய வாழிடம் உருத்திரபுரத்தில் அமைந்திருந்தாலும் இவர் தன் பணிகளை அக்கிராமத்தோடு மட்டும் மட்டுப்படுத் திக்கொள்ளவில்லை. தொகுதி சார்ந்த பல்வேறு சமூக அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக, இரணைமடு அம்மன் கோவில் கட்டுமானம், கிளிநொச்சி கந்தசாமி கோவில் நிர்வாகம் என இவர் சேவை எங்கும் பரந்து விரிந்திருந்தது.
1970-ல் இவர் ஆதரவளித்த தமிழரசுக்கட்சி வேட்பாளர் திரு. ஆலாலசுந்தரம் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்விய டைந்த போதும் திரு. நாகலிங்கம் தன் சமூகப் பணிகளை விடாது தொடர்ந்தார்.
இவர் பணி ஓய்வு பெறும்வரை உருத்திரபுர மகாவித்தியாலய முதல்வராக நீண்டகாலம் பணியாற்றினார். இளையோர் வளம் பெறப் பலவழிகளிலும் உதவி, அவர்கள் முன்னேற அரும் பெரும் பணியாற்றினார். குருகுலமும் காந்தி சேவாசங்கமும் இவர் சமூகப் பணியாற்றிய பெருங்களங்களாக இருந்தன. இவர் கனடாவுக்குப் பெயரும்வரை இவ்விரு அமைப்புகளோடும் இறுக்கமாக இணைந்திருந்தார். பின்னாட்களில் வலுவடைந்த போர்ச் சூழல், இவருடைய சமூகப் பணிகளின் வீரியத்தைக் குறைத்தாலும் தன்னளவில் ஆற்றவல்ல பலவற்றையும் செய்துகொண்டுதானிருந்தார்.
1995-ல் கனடாவுக்குப் பெயர்ந்த பின்னரும் இங்கிருந்தபடியே உருத்திரபுர மக்களுக்குப் பலவழிகளிலும் உதவினார். குறிப்பாக வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உறுதுணையாக நின்றார். இங்கும் உருத்திரபுரம் மக்கள் அமைப்பு நிலையில் ஒன்றிணைந்து இயங்க அனைத்து வழிகளிலும் உதவினார். அவ்வமைப்பின் காவலராகவே திகழ்ந்தார்.
தாய்வீடு இதழில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகளை எழுதினார். அவற்றின் வழியே கிளிநொச்சி பற்றிய பலரும் அறியாத செய்திகள் வெளிப்பட்டன. அவற்றுள் குறிப்பாக இரணைமடுக் குளத்தின் வரலாறு பற்றி எழுதிய அவருடைய கட்டுரை மிகச் சிறப்பானதாக இருந்தது.
கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர், திரு. சிவஞானம் சிறிதரன் விடுத்திருக்கும் இவர் பற்றிய அறிக்கை, தலைமுறை கடந்தும் இவர் ஆற்றிய சேவைகளைக் கிளிநொச்சி மண் மறக்கவில்லை என்பதை எமக்கு அறிவிக்கின்றது
.
சிறந்த சமூக சேவையாளரும் ஆசிரியரும் வழிகாட்டியுமாக விளங்கிய திரு. கா. நாகலிங்கம் அவர்கள் 93 வயதுவரை இந்த மண்ணிலே வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவெய்தியிருக்கின்றார். எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்ற பெருவாழ்வு அவருக்குரியது.
கிளிநொச்சி என்ற ஊரின் வாழ்வோடும் வரலாற்றோடும் இணைந்திருந்த பெருந்தகை. என்றென்றும் எம் நினைவில் நிலைத்திருப்பார்.
பொன்னையா விவேகானந்தன்
(நன்றி தாய்வீடு)