வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (ஜூன்19) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. அதையொட்டி இந்தக் கட்டுரை பிரசுர மாகிறது.
நயினையம்பதியிலே உறைந்திருக்கும் நாகபூசணி அம்பிகையை நாகம் பூசித்த வரலாறு அற்புதமானது – அநாதியானது. நாகபூசணி என்ற நாமகரணம் நாகம் பூசித்து வழிபாடு இயற்றியமையால் அம்பாளுக்கு ஏற்பட்டது என்பது வரலாறு.
நாகபாம்பு ஒன்று நயினாதீவுக்கு வடக்காக அமைந்துள்ள புளியந்தீவிலிருந்து நாள்தோறும் பூக்களை எடுத்து வந்து அம்பாளை வழிபடுவதையே வழக்கமாக கொண்டிருந்தது. வழமை போலவே ஒருநாள் பூவை எடுத்து வருகின்ற வழியில் கருடனை தற்செயலாக சந்தித்தது. கருடன் தன்னுயிரை பறிக்கப்போகும் உண்மையை உணர்ந்தும் கொண்டது. அவ்விதமே கருடனும் நாகத்தின் உயிரை பறிப்பதற்கு முயற்சித்தது.
இந்த சந்தர்ப்பத்தில் நாகம் பய உணர்வின் மேலீட்டோடு கடல் நடுவே இருந்த மிகப் பெரிய கல்லின் மீது தனது உடல்முழுவதையும் சுற்றிக்கொண்டது. கருடனும் இன்னொரு கல்லில் அமர்ந்த படி நாகத்தின் உயிரைப் பறிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.
அந்த சந்தர்ப்பத்திலே கடல் வழியாக மரக்கலம் ஒன்றிலே பண்டங்களை ஏற்றி வந்த வணிகன் இந்தக் காட்சியை கண்டான். நாகத்தின் மீது கருசனை கொண்டு அதனை காப்பாற்ற முயற்சித்தான்.
நாகத்தை கொன்று விடாதே எனக் கருடனை கெஞ்சினான். கருடன் வணிகளை விளித்து “நீ உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் எடுத்து வந்து அம்பாளுக்கு ஆலயம் அமைப்பதாக உறுதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நான் நாகத்தை கொல்லாது விட்டு விடுகின்றேன்”, என்று மொழிந்தது.
வணிகனும் அதற்கு சம்மதித்தான். கருடன் நாகத்தை கொல்லாது அவ்விடம் விட்டு நீங்கியது.
வணிகனும் நாடு திரும்பினான். நடந்த விடயங்கள் தொடர்பில் மனைவிக்கு எடுத்துக் கூறினான். அந்த சந்தர்ப்பத்திலே கண்ணைப்பறிக்கும் பேரொளி தோன்றி மறைந்தது. அம்பாளின் அற்புதத்தை எண்ணி வியந்தனர். தன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் நயினாதீவுக்கு கொண்டு வந்து அம்பாளுக்கு அழகிய ஆலயம் அமைத்தான்.
அத்தகு அற்புதங்களின் வியாபாகமே அன்னையின் சந்நிதானம். இன்று பெருவிருட்சமாக வியாபித்து அடியவர்களை ஆற்றுப் படுத்துகின்றது.
ஆகம மரபுக்கு உட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இந்த ஆலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச்சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவ வடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்பு உருவங்களாகவே உள்ளன. அத்துடன், அம்பாளின் கால்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
ஆலயத்தின் பெருந்திருவிழா ஆனிப் பூரணையை தீர்த்தத் திருவிழாவாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே திருவிழா நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து 15 நாட்கள் நடைபெறுகின்றது. (நன்றி ஈழநாடு)