அரசாங்கம் எத்தனை தடைக் கட்டளையை பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என அனைத்து தமிழ் தேசயக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05இற்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு குறித்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று கூடியிருந்தனர். இதன் போதே ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில்,2020ஆம் ஆண்டு மாவீரர் தினம் தொடர்பாக எட்டு கட்சிகள் சேர்ந்து கலந்துரையாடிஎடுத்த முடிவுகளின் படி
மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்திகை 27ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் அஞ்சலித்து வந்துள்ளோம். இவ் நினைவேந்தல்களுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு கிழக்கில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.
எத்தனை தடைக்கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், மரணித்த உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கு உள்ள அடிப்படை உரிமையை மறுத்து நிற்க முடியாது.
இந் நிலையில் மாவீரர் நினைவேந்தல்களை தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது இல்லங்களில் இருந்தே முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். வழக்கம் போல மாலை 6.05ற்கு தமது இல்லங்களில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு மக்களை கோருகின்றோம். என அவ் அறிக்கையில் இருந்தது.
இக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சுரேஷ் பிரேமசந்திரன், சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐங்கரநேசன், கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.