யாழில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதை செய்து கத்தியால் குத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தார்.
ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் தனது வாழ்வாதாரத்திற்காக முதியவரை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் வேலை செய்யும் வீட்டில் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு கத்தியால் குத்தியும் உள்ளார்.
குறித்த சம்பவத்தில் அந்த குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய சுன்னாகம் பொலிஸார், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்.