யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது அதிகரித்திருந்தது. தற்போது கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக இந்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளபோதும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இவர்கள் ஆரம்பத்தில் நயினாதீவுக்குச் சென்று நாகவிகாரையை வழிபட்டுச் செல்வதே வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பெருந்தொகையாக நெடுந்தீவுக்கு வந்து செல்கின்றனர். ஏப்ரல், ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் வருகை தரும் இவர்களில் அதிகம் பேர் சிங்கள மக்களாவர். மிகக் குறைந்த அளவில் ஐரோப்பிய இனத்தவர்களும் இங்கு வருகை தருகின்றனர்.
தற்போது, நெடுந்தீவு ஒரு சுற்றுலா மையம் என அறிவிக்கப்பட்டு, அரச பாடநூல்களில் தரம் 7 ஆங்கில பாடப் புத்தகத்தில் நெடுந்தீவில் உள்ள புறாக்கூடு, பெருக்கு மரம் என்பன பற்றியும், தமிழ் மாணவர்களுக்கான இரண்டாம் மொழி சிங்களப் பாடப்புத்தகத்தில் நெடுந்தீவு பற்றியும் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணம் என்பதற்கு ‘அறிவைப் பெறும் நோக்கத்துடன் மேற்கொள்ளும் பயணம்’ என்ற ஒரு கருத்து உள்ளது. இதைவிட அதற்கு பல உபநோக்கங்கள் உள்ளன. நெடுந்தீவுக்கு வருகை தருகின்றவர்களுக்கு, குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு வரையிலான கடல் பயணத்தை இரசித்தல், இங்கு உள்ள புராதன சின்னங்களைப் பார்வையிடல், குதிரைகளைப் பார்வையிடல், கடலில் நீராடுதல், மலிவாக ஆட்டிறைச்சியை பெற்றுக் கொள்ளல் என இந்நோக்கங்கள் ஆளாளுக்கு வேறுபடலாம்.
இவ்வாறு பல நோக்கங்களுக்காக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான வசதிகளை செய்து கொடுப்பதும் அதற்கூடாக வருமானத்தைப் பெறும் வழிகளை இனங்காண்பதும் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேசசபை, மற்றும் தனியார் ஆகியோரின் பொறுப்பாகும். இந்த வகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எவ்வளவு தூரம் நெடுந்தீவுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு துறையாக வளர்ச்சி பெற்று வருகின்றது என்பது பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகின்றது.
1)
நெடுந்தீவு சுற்றுலா மையமாக வளர்ச்சி அடைவதில் அடிப்படையில் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயிரக்கணக்காக வந்து செல்லும் பயணிகளை இலக்கு வைத்து வருமானத்தை ஈட்டத்தக்க பொறிமுறை எதுவும் பிரதேசசபை, பிரதேச செயலகம், தனியார் போன்ற எவரிடமும் இல்லை. 2019ஆம் ஆண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்திடம், தகவல் அறியும் படிவத்தின மூலம் ‘நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக வினவியபோது, 2019.02.12 திகதியிடப்பட்ட கடிதத்தின் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.
இணைப்பு 1
‘2019ஆம் ஆண்டு நெடுந்தீவு பிரதேசத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக ஓய்வு மண்டபம் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ளுர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக உள்ளுர் உற்பத்தி விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
2017/2018ஆம் ஆண்டு வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் ஊடாக
1. பெருக்கு மரத்தை சுற்றியுள்ள பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
2. மணற்கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க நிழற்குடை வசதிகள் செய்யப்பட்டன.
என்றவாறு அவர்களின் பதில் அமைந்திருந்தது. ஆனால் இதுவரையில், ஓய்வு மண்டபம், உள்ளுர் உற்பத்தி விற்பனை நிலையம் என்பன அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் கூட இன்னும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இது நிற்க, இதே விடயத்தை நெடுந்தீவு பிரதேச சபையிடம் வினவியபோது 2019.02.22 திகதியிடப்பட்ட கடிதத்தில் பிரதேசபையின் செயலாளரால் வழங்கப்பட்ட பதில் பின்வருமாறு.
இணைப்பு 2
இல | வேலைத் திட்டம் | நிதி மூலம் | நிதி தொகை (மில்லியன்)
|
அடைவு மட்டம் |
01 |
நெடுந்தீவு பிரதேச சபையின் மணல்தறை தங்குனர் |
குறித்தொதுக்கப்பட்ட |
0.92 |
நிறைவு செய்யப்பட்டுள்ளது |
02 |
நெடுந்தீவு பிரதேச சபையின் |
குறித்தொதுக்கப்பட்ட (PSDG) |
0.15 |
நிறைவு செய்யப்பட்டுள்ளது |
அதாவது பிரதேச சபையிடமும் எந்தவிதமான திட்டமும் இல்லை. பயணிகள் தங்குவதற்கான விடுதியை இரண்டு தடவை திருத்தி அமைத்ததைத் தவிர, வேறு எந்த திட்டங்களும் அவர்களிடம் காணமுடியவில்லை. பல்கலைக்கழகங்களில் நிர்வாகம், திட்டமிடல் என்பவற்றில் படித்து பட்டம் பெற்றவர்களிடம் எத்தகைய திட்டங்களும் இல்லை என்பதுடன் அவர்கள் வெறுமனே மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஊழியப் படையாகவே இங்கு வந்து செல்கின்றனர் என்பது வருந்தத்தக்கதொரு விடயமாகும்.
இதேபோன்று தனியார் முயற்சிகளும் மிக இழிவான நிலையிலேயே உள்ளன. பலர் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனத்தை வாடகைக்கு விடுவதையே தமது முழு முயற்சியாக மேற்கொள்கின்றனர். ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களின் எண்ணிக்கையே பெருகிச் செல்கின்றது. இதில் இருந்து சிறிது மாறுபட்டு சிந்திக்கின்ற போக்கு அவர்களிடம் இல்லை. நண்பர்கள் வட்டம் என்ற அமைப்பு ஒரு விற்பனை நிலையத்தை மாற்றுச் சிந்தனையுடன் செயற்படுத்த முனைந்தபோதும் அந்த விற்பனை நிலையம் பொருத்தமான இடத்தில் அமையாமை, பயணிகளின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யத்தவறியமை போன்ற காரணங்களால் சாதகமான பலன்களைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பயணிகள் அனைவரையும் ஒன்று சேர்க்கக் கூடிய ஒரு கடைத்தொகுதி (விற்பனை நிலையம்) எவ்வளவு அவசியமானதென்பது இங்கு உணரப்பட வேண்டியதொன்றாகும்.
2) நெடுந்தீவுக்கான பிரதான போக்குவரத்து கடல் மார்க்கமாகும். இன்று வடதாரகை, நெடுந்தாரகை என்பன சேவையில் இருந்து விலகியுள்ள நிலையில், போக்குவரத்திற்கான நேர அட்டவணை பல தடவைகள் மாற்றம் பெற்று வந்துள்ளபோதிலும் இதற்கு முன் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து வருமானத்தை பெறவேண்டும், என்ற அடிப்படையில் போக்குவரத்திற்கான அட்டவணை ஒரு போதும் ஒழுங்கமைக்கப்பட்டதில்லை. வடதாரகை, நெடுந்தாரகை என்பன சேவையில் ஈடுபட்ட காலத்தில், காலையில் 8.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்படும் வடதாரகை, மீண்டும் மாலை 4.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும். இது முற்றிலும் இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்லும். அதனால் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் கட்டணம் இன்றி பயணிக்கின்ற சூழல் இங்கு தாமாகவே வலிந்து உருவாக்கப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பணி நிமிர்த்தம் வரும் உத்தியோகத்தர்கள் பயணிப்பதற்கு வசதியாக இந்த நேரஒழுங்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததொரு விடயமாகும். ஆனால் அவர்கள் சேவை வழங்கும் இடத்தின் கடினத் தன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களின் சம்பளத்துடன் மேலதிகமாக ஆசிரியர்களுக்கு 2500.00 ரூபாயும், பிரதேச செயலகம், பிரதேச சபை என்பவற்றில் கடமையாற்றுவோருக்கு 5000.00 ரூபாயும் விசேட படியாக வழங்கப்படுவதுடன், இங்கு அவர்கள் தங்கிச் செல்வதற்கு விடுதி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அரச உத்தியோகத்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் நேரத்தை வடதாரகைக்கு ஒதுக்காமல் நெடுந்தாரகைக்கு ஒதுக்கி இருப்பின், கூடிய அளவு வருமானத்தை பிரதேசசபை ஈட்டியிருக்க முடியும். ஆனால் இவ்வாறான மாற்று ஒழுங்கு செய்ய அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை. அதே போன்று சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து குவியும் மாதங்களில் அவர்கள் 18000.00 ரூபாய்க்கு நயினாதீவு வள்ளங்களை வாடகைக்கு அமர்த்தியே இங்கு வந்து செல்கின்றனர். இத்தகைய நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தனியார் வள்ளங்களை வைத்திருப்போர் யாரும் முன்வரவில்லை. உள்ளுரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு முக்கிய இடங்களைச் சுற்றிக் காட்ட 3000.00 ரூபாயில் இருந்து 6500.00 ரூபா வரையில் அறவிடுகின்றனர். இது அதிகமான தொகையாக இருந்தாலும் நெடுந்தீவின் வீதிப் போக்குவரத்துக் கட்டமைப்பு படுமோசமாக இருப்பதால் வாகனங்கள் பழுதடையும் நிலை அதிகமாக உள்ளது.
கடந்த அரசாங்கத்தின் கம்பரெலிய’ திட்டத்தின் மூலமும் அதற்கு முன்னரும் பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகளில் குறிப்பிடத்தக்க அளவு வீதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 14 வீதிகளில் எவையும் இதுவரை திருத்தம் செய்யப்படவில்லை. அதில் முக்கியமாக நெடுந்தீவின் பிரதான வீதியும், வெல்லை வீதியும் 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருத்தம் செய்யப்படாமல் இருப்பதுடன் வாகனங்கள் பிரதான வீதியால் செல்வதை தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்தி வருவதையும் காணமுடிகின்றது.
இந்நிலையில் மாற்று வீதிகளும் விரைவில் சேதமடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வீதிக் கட்டமைப்பு மோசமாக இருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தையே உண்டுபண்ணும் என்பதனை தகுந்த அதிகாரிகள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
3)
சுற்றுலாப் பயணிகளுக்கான நம்பிக்கைக்குரிய விடுதியாக பிரதேசசபையின் தங்குனர் விடுதி மட்டுமே உள்ளது. பல கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட தனியாருக்குச் சொந்தமான ‘சமுத்திரா’ என்ற விடுதி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. ஆனால் பிரதேசசபையின் தங்குனர் விடுதியை சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்ற போதும் அசௌகரியமான பல நிலைமைகள் அதில் உள்ளன. உண்மையில் இந்த விடுதி பிரதேச சபைக்கு ஒரு சிறந்த வளம். இதனை பொருத்தமான பொறிமுறையுடன் இயங்கச் செய்வதாக இருந்தால் பிரதேசசபை இதனூடாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். ஆனால் உண்மைத் தன்மையோ வேறாக உள்ளது. இங்கு இதுவரையில் நிரந்தரமான சுத்திகரிப்பு தொழிலாளிகள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. பல தடவைகள் இங்கு முற்பதிவை செய்து கொண்டு வரும் பயணிகளே சமையலறையை சுத்தம் செய்த பல கதைகள் இங்கு நடந்தேறியுள்ளன.
இன்னும், இங்கு தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விடுதி அரசுடைமை என்று கருதத்தக்கவகையில் தங்குனர் விடுதிப் பகுதிக்குள் ‘இந்த கட்டடம் பிரதேச சபைக்குச் சொந்தமானது’ என்பதற்கான எந்த அறிவித்தல் பலகையும் இங்கு காட்சிப்படுத்தப்படவில்லை. எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த விடுதியை தனியாருக்கு சொந்தமானது என்றே கருதுகின்றனர். இதனால் அவர்கள் தாம் சேவையை பெற்றுக் கொண்டதற்கான பணத்தை செலுத்தி பற்றுச் சீட்டினை பெற்றுக்கொள்வதில்லை. அங்கு கடமையில் உள்ளவர்களும் அவர்களுக்கு பற்றுச் சீட்டு வழங்குவதில்லை. இதனால் உண்மை வருமானம் பிரதேச சபைக்குச் சென்று சேருவதில்லை. எனவே இவ்வாறான பொருந்தாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விடுதி வளாகத்திற்குள் உரிய அறிவித்தல், அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் உரிய இடங்களில் காட்சிப்படுத்துவது அவசியமாகும். இது அரச விடுதி என்பது பயனாளிகளுக்கு தெரிய வரும்போது அவர்களும் தமது சேவையை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முனைவர். தற்போது நீண்ட காலத்திற்கு பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள தனியார் காணியில் ‘தங்குனர் விடுதி’ என்ற அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது. ஆனால் அது பயனாளிகளின் பார்வையில் படும்படியாக விடுதியின் சுற்றுப் பகுதிக்குள் அமைந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது நிற்க, விடுதி அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் பல கிணறுகள் பாவனையில் உள்ளன. அதில் இரண்டு கிணறுகள் மாத்திரம் குடிநீராக பயன்படுகின்றது. அந்த கிணறுகளில் எவ்வித அறிவித்தல் பலகைகளும் இல்லை. இதனால் கடலில் நீராடும் சுற்றுலாப் பயணிகள் பின்னர் குடிநீர்க் கிணறுகளிலும் குளிக்கின்றனர். இது பற்றி அறியாத மக்கள் தமது பாவனைக்காக அந்நீரை எடுத்துச் செல்வார். இது தொடர்பாக பிரதேச சபையிடம் எடுத்துக் கூறியபோதும் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதேசசபை உறுப்பினர்களும் இதில் அக்கறை செலுத்தவில்லை. எனவே இவ்வாறான அசௌகரியங்களை நீக்குவது பிரதேசசபையின் பொறுப்பும் கடமையுமாகும்.
இதுதவிர, நெடுந்தீவு மணற் பகுதியில் 2018ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 20 இலட்சம் ரூபாய் செலவில் சேவாலங்கா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட விடுதி, நெடுந்தீவு கடற்றொழில் சங்கங்களின் சமாசத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சரியாக மூன்று வருடங்களின் பின்னர் விடுதி முற்றாக அகற்றப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது. அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் எமக்கு எவ்வளவுதான் உதவ முன்வந்தாலும், கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் பிறந்தவர்கள் பாலை நிலத்தின் சூறையாடுலை மாத்திரம் கச்சிதமாக செய்து முடித்து விடுகிறோம் என்பதை நினைத்து வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.
4)
எமது தீவு ஏனைய இடங்களில் இருந்து தனித்துவமானது. எமது மண்ணுக்கென பண்பாட்டு அடையாளங்கள் பல உள்ளன. சுற்றுலாப் பயணத்தின் தலையான நோக்கங்களில் ஒன்று தனித்துவமான பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்வதாகும். ஆனால் அது பற்றிய தெளிவு இங்கு போதிய அளவு இல்லை. சிங்கள மொழியில் ‘கம்பெரலிய’ (கிராமப் பிறழ்வு) என்ற முதல் நாவலை எழுதிய நாவலாசியர் ‘மாட்டீன் விக்கிரமசிங்க’ அவர்கள் வாழ்ந்த காலி மாவட்டத்தின் ‘கொக்கலை’ என்ற கிராமத்தில், அவருடைய வீடு, அவர் பாவித்த பொருட்கள் (எழுதுகோல், மேசை, கதிரை, கைத்தடி) மற்றும் அவர் எழுதிய நூல்கள், அவருடைய கல்லறை என்பன காட்சிப் பொருளாக வைக்கப்பட்டு, நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் கட்டணம் செலுத்தி அதை பார்த்துச் செல்கின்றனர்.
ஆனால் உலகத்தமிழாராட்சி மாநாட்டை நடாத்தி புகழ் பெற்ற தனிநாயகம் அடிகளார். நெடுந்தீவை சேர்ந்த ஒரு அறிவுஜீவியாக இருந்த போதும், அவர் வாழ்ந்த எச்சங்கள் இங்கு இல்லாதபோதும், அவர் தமிழுக்கு ஆற்றிய இதர பணிகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் நினைவகத்தை அமைக்க இதுவரை யாரும் முயற்சிக்கவில்லை.
அதுபோன்று, நெடுந்தீவின் பண்பாட்டை அடியொற்றி எமது மண்ணுக்கென ஓர் கலாசார மையத்தை அமைக்கவும் இதுவரை யாரும் முன்வரவில்லை. கடல்தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பனை சார்ந்த இதர உற்பத்திகள், என்பன தொடர்பான பாரம்பரிய அறிவும், அவற்றில் பயன்படுத்திய கருவிகளும் அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை ஒன்றினைப்பதன் ஊடாக எமது மண்ணுக்கான பொருள்சார் பண்பாட்டை உருத்திரட்ட முடியும்.
நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தரிசித்து செல்லும் போர்த்துக்கேய, ஒல்லாந்த எச்சங்கள் எம்மண்ணுக்குரிய பண்பாட்டு எச்சங்கள் அல்ல. மாறாக அவை காலனித்துவத்தின் அடையாளங்களே! எனவே நாம் எமது மண்ணுக்கான அடையாளங்களை உருத்திரட்ட முயலவேண்டும்.
எம்மண்ணில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றின் வரலாறுகள் இன்னும் துல்லியமாக தெளிவுபடுத்தப்படவில்லை. இங்கு வரும் பயணிகளுக்கு வாகன ஓட்டுநர்களே ஒரு வகையில் வழிகாட்டிகளாகவும் உள்ளனர். அவர்கள் தமக்குத் தெரிந்த மொழியில், தமக்குத் தெரிந்ததை கூறிவருகின்றனர். இங்கு உள்ள புராதன சின்னங்களின் குறிப்பு பலகையில் அந்த சின்னங்கள் தொடர்பான தகவல்கள் மிக சொற்பமாகவே தரப்பட்டுள்ளன. நெடுந்தீவு வைத்தியசாலை பகுதியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையில் ‘பாதுகாப்பு நோக்கத்திற்காக போர்த்துக்கேயரால் உருவாக்கப்பட்ட இவ் அரண், ஒல்லாந்தரால் இரண்டு கொத்தளங்களை உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப் பட்டது. (The donjon constructed by the Portuguese for defense was turned into a fort with two bastions by the Dutch) இதுபோன்ற தரவுகள் போதுமானவை அல்ல. எனவே வரலாற்றை பொருத்தமான முறையில் ஆவணப்படுத்தும் முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
5)
பொதுவாக தென்னிலங்கை சிங்கள மக்களால் யாழ்ப்பாண பனம் பொருள் உற்பத்திகள், கடல்வள உற்பத்திகள், பழங்கள் என்பன விரும்பி நுகரப்படுகின்றன. (இலங்கையில் உள்ள பழவகைகளில் பெருமளவு பழங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளது. வாழைப்பழம், முந்திரிகை, பலா, பப்பாசி, மா) ஆனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உற்பத்தியை வழங்குவதை விடுத்து, தரமற்ற உற்பத்திகளையும், கூடவே கள்ளத் தராசையும் பாவித்து அவர்களை ஏமாற்றுவதையே பலர் செய்து வருகின்றனர். பொதுவாக கடல் இல்லாத அனுராதபுரம், பொலன்னறுவ, குருணாகல் போன்ற இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மீன்கள் தொடர்பான பரிட்சயம் இல்லை. எனவே அவர்களுக்கு யாழ்ப்பாணக் கடைகளில் காரல், கீளி, திரளி போன்ற மீன் கருவாட்டை மிகையான புனைவுடன் ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். நெடுந்தீவில் உதிரியாக பணம்பொருள் விற்பனையாகும் இடங்களில் சீனி சேர்க்கப்பட்ட பனங்கட்டிகளே தரமான பனங்கட்டியாக விற்பனையாகின்றது. அதாவது தரமான பனைசார் உற்பத்திகள், கடல் உணவுகள் என்பவற்றை நல்ல தரத்துடன் உற்பத்தி செய்து அந்த பொருள் தொடர்பான Brandஜ நாம் இதுவரை உருவாக்கவில்லை.
2019ஆம் வருடம் மார்கழி மாதம் நெடுந்தீவுக்கு வருகை தந்த சிங்கள ஆசிரியர்களின் மனப்பதிவு பின்வருமாறு அமைந்திருந்தது. ‘1950 களில் இலங்கை எப்படி இருந்தது என்பதை அறிய வேண்டுமானால் நெடுந்தீவுக்கு வரவேண்டும்.’ அதாவது நெடுந்தீவு ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் பின்நோக்கி நிற்கின்றது என்பதை இந்தக் கருத்து குறித்து நிற்கின்றது. இந்நிலையில்,
நெடுந்தீவில் உள்ள அரச நிறுவனங்களில் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்களும் சுற்றுலாத்துறையை வளர்த்து எடுப்பதில் பாரிய பொறுப்பு உள்ளது. இதில் பிரதேசசபை அதன் உத்தியோகபூர்வ, மற்றும் தேர்தல் மூலமான மக்கள் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டு தலைமைத்துவமும் பன்நெடுங்காலமாக தோல்வியடைந்து வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிட்டன.
மக்களுக்கு இதயசுத்தியுடன் பொருத்தமாக சேவை செய்ய அவர்கள் இன்னும் தயாரில்லை. மக்களுக்கு சேவையாற்றவென வந்தவர்கள் இன்று கள்ளமாக மண் ஏற்றுகின்றனர். எனவே அவர்கள் நல்லதைச் செய்வார்கள் என மேலும் மேலும் எதிர்பார்க்க முடியாது. அதனைச் செய்வதற்கான அறிவோ, அனுபவமோ, பட்டறிவோ, அவர்களிடம் இல்லை.
இதில் ஓரளவு வினைத்திறனுள்ள நிறுவனமாக பிரதேச செயலகம் உள்ள நிலையில் அவர்கள் உரிய திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு பொருத்தமானதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையை உள்ளீர்ப்பதன் மூலம் இது தொடர்பான வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த முடியும். முன்னைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சிக் காலத்தில் அனைத்து திணைக்களங்களையும் ஒன்றினைத்து கலந்துரையாடல் ஒன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்று சுற்றுலா அதிகார சபை, சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவுக்குள் சுற்றுலா அதிகார சபையை உள்ளீர்ப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க வகையில் பல இடங்களையும் மாற்றியமைக்க முடியும். தற்போது சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் ஈட்டும் அறுகம்பை, பாசிக்குடா என்பன முன்பு நெடுந்தீவு போன்று வளர்ச்சியடையாது இருந்த பிரதேசங்கள் தான் என்பதை உரியவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
2021.04.22 அன்று EFECS திட்டத்தின் அனுசரனையுடன் வடமாகாண சுற்றுலா பணியகம் இணைந்து நெடுந்தீவு பிரதேசத்;திற்கான தொழில்சார் நடனக்குழுவை உருவாக்கும் அறிமுக அமர்வு நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் உள்ளடக்கம் பொருத்தமுற வடிவமைக்கப்பட்டிருந்தது. வளவாளர்கள் தீவுக்கு வெளியே இருந்து வந்திருந்தனர். எமது பிரதேசத்திற்கான தொழில்சார் நடனக்குழுவை வடிவமைக்கும் நிபுணத்துவமுடைய அண்ணாவிமார் இங்;கு இல்லை. அந்த வகையில் வெளியில் இருந்து வளவாளர்களை உள்வாங்கும் செயற்பாடு பொருத்தமானதே. கொவிட் 19 நோய்தொற்று காரணமாக அனைத்தும் தேக்கமடைந்திருக்கும் நிலையில் நிலமை சீராகும்போது இச்செயற்பாடு முழுமை பெறவேண்டும்.
நெடுந்தீவில் உள்ள பல தொல்பொருட் சின்னங்கள் தொல்பொருள் திணைக்களத்திற்கே உரித்தானவையாகும். இவற்றை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றியே பார்த்துச் செல்கின்றனர். அவற்றுக்குரிய பொதுகட்டண முறையை உரிய திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகலாம். நெடுந்தீவில் நாளுக்கு நாள் புதிய புதிய அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுகின்றதே தவிர, அபிவிருத்தி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அவர்களின் அபிவிருத்தி எல்லாம் வாயளவில் மாத்திரமே உள்ளன. இவற்றை தவிர்த்து உரிய வழிவகைகளை இனங்கண்டு நிலைத்த நீடித்த அபிவிருத்தியை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.
நெடுந்தீவுக்கு போனால் கள் அருந்தலாம், மலிவாக ஆட்டிறைச்சி உண்ணலாம், கடலில் நீராடலாம் என்ற மனநிலையை மாற்றியமைக்க வேண்டும். எதையும் ஒரு ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வந்து செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் எம்மண் தனித்து விடப்பட்டிருந்தாலும் வளங்கள் அற்ற தீவு அல்ல எம்மண். உலகின் கவனத்தை ஈர்க்கவல்ல தன்மைகள் எம்மண்ணில் உள்ளன. அதற்கான பெறுமதியை, கௌரவத்தை, அடைய எமது ஆக்கபூர்வமான செயற்திட்டங்களையும் சிந்தனைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். யுத்தம் நிறைவு பெற்று நாடு அபிவிருத்தி, வளர்ச்சி பற்றி சிந்திக்கும் பாதையில் எமது மண்ணுக்கான வாய்ப்புக்களையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அவாவாகும்.