இது ஒரு தமிழாக்கத் தொடர். ஜோன் பென்றி லூவிஸ் (John Penry Lewis) தீவகம் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கு தொடராக வெளிவரவுள்ளன.
Topographical Notes on the Jaffna Islands (யாழ் தீவக இடவிபரக் குறிப்புகள்) எனும் தலைப்பில் அவர் எழுதிய
குறிப்புகள் Spolia Zeylanica (இலங்கை மரஞ்செடிகொடிகள்) எனும் திரட்டில் இடம் பெற்றுள்ளன. இலங்கை அரசாங்க
அச்சகத்தில் அச்சிடப்பட்ட இத்திரட்டு 1908-இல் இலங்கை அரும்பொருளகத்தால் வெளியிடப்பட்டது.
இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக விளங்கிய ஜோன் பென்றி லூவிஸ் இரணைதீவு, கச்சைதீவு, நெடுந்தீவு,
ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு, நைனாதீவு அனைத்தையும் பார்வையிட்டார்.
ஒவ்வொரு தீவையும் பற்றி தனித்தனியான குறிப்பை எழுதினார். இது அவர் எழுதிய குறிப்புகளுள் ஒன்று:
கச்சைதீவு
—————
1904 டிசம்பர் 2ம் திகதி காலை 11 மணிக்குப் புறப்பட்டு மாலை 2:30 மணிக்கு கச்சைதீவை அடைந்தோம். இது நெடுந்தீவுக்கும் இராமேசுவரத்துக்கும் இடைப்பட்ட தீவு. நெடுந்தீவுக்கு தென்கிழக்காக 11 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் வாழாத தீவு.
காலையிலிருந்தே காற்றெழுந்து வீசியது. தென்புறத்தில் ஆழ்நீர் சூழ்ந்தது. எமது சட்டகம் செப்பமானதல்ல என்பது புரிந்தது. சட்டகத்தில் ஆழம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் ஆழம் அதிகம்.
நாங்கள் கரையிறங்கி எமது கூடாரத்தை அமைத்தோம். இங்கிலஸ் உடனடியாகவே அளப்பனவில் இறங்கினார். அந்தி சாய முன்னரே அரைவாசி அளப்பனவை அவர் முடித்துவிட்டார்.
இங்கு காணப்படும் மரங்களுள் கண்டல் மரம் முக்கியமானது. வலை, கப்பற்பாய் என்பவற்றுக்கு கண்டல் மரச் சாயம் பூசப்படுகிறது. கூழைச் சூரியா மரங்களும், கொடிவகைகளும், பூச்செடிகளும் இங்கு காணப்படுகின்றன. இன்னொன்று கார்த்திகைப் பூச்செடி. கார்த்திகையில் மலர்வதால் இதற்கு யாழ்ப்பாணத்தில் இப்பெயர் வழங்கி வருகிறது.
எமது கூடாரம் ஒரு மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்தது. பணியாளர்கள் அதை எருக்கலை மரம் என்கிறார்கள். ஏற்கனவே ஒரு செடியளவில் இதை வேறிடங்களில் நான் கண்டிருக்கிறேன். இப்படி மரமாக வளர்ந்ததை முன்னர் நான் கண்டதில்லை. அது வேறொரு மரத்தினுள் வளர்ந்திருந்தது. இரண்டின் இலைகளும் ஒன்றை ஒன்று ஒத்திருந்தன. ஆனால் பூக்கள் வேறுபட்டிருந்தன.
அரச தாவரத் தோட்டத்தில் இனங்காணவென அதன் கிளை ஒன்றை எடுத்துச் சென்றேன். இலவங்கப்பூ போல் தென்பட்ட வேறொரு செடியையும் எடுத்துச் சென்றேன். கச்சைதீவில் கரணைக்கிழங்கு பெருவாரியாகக் கிடைக்கிறது. அது அவித்து உண்ணப்படுகிறது. அதிலிருந்து மாவும் ஆக்கப்படுகிறது. 1904 பங்குனி, சித்திரை மாதங்களில் கச்சைதீவிலிருந்து
12 தொன் கரணைக்கிழங்கு நெடுந்தீவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
தீவின் கிழக்கு மூலையில்தான் நாம் நங்கூரமிட்டிருந்தோம். சிறிய பவளக்கற் கோவளம் இங்கு காணப்படுகிறது. அதில் ஓர் அளவைக்கூம்பு அமைந்திருந்த தடயங்களை இங்கிலஸ் சுட்டிக்காட்டினார். இந்திய அரச கடல் அளவைத் துறை அதை அமைத்திருக்கலாம். ஆனாலும் கச்சைதீவு என்றுமே முழுமையாக அளக்கப்படவில்லை.
இங்கு நன்னீர் கிடையாதபடியால் மக்கள் வாழ்வதில்லை. தீவின் எதிர்ப்பக்கத்தில் சேதமடைந்த வள்ளம் ஒன்றையும் இங்கிலஸ் சுட்டிக்காட்டினார். எரிந்த விறகும் எமக்குத் தெரிந்தது. கடலாளர்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இங்கு வந்து போயிருக்க வேண்டும்.
இது ஒரு மைல் நீளமும், அரை மைல் அகலமும் கொண்டது. மேற்குப்புறத்தில் ஒரு புல்வெளி காணப்படுகிறது. இரணைதீவிலும், கச்சைதீவிலும் பாம்புகள் இல்லை என்று எம்மிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தவறு என்பதை, இரணைதீவில் ஓர் உரோமக் கத்தோலிக்க தேவாலயத்திலும், கச்சைதீவிலும் காணப்பட்ட பாம்புச்செட்டைகளை வைத்து நாம் கண்டறிந்தோம்.
டிசம்பர் 3ம் திகதி இரவு விட்டுவிட்டு மழை கொட்டியது. படிப்படியாக காற்றுக் கிளம்பி வீசுவது போல் தென்பட்டது. அத்துடன் எம்மிடம் ஓரளவு தண்ணீரே இருந்தது. இன்று காலை உப்புத்தண்ணீர் கொண்டே முகங்கைகால் கழுவினோம். நாங்கள் இயன்றளவு விரைவாகப் புறப்படுவதே புத்தி என்று தெரிந்தது. ஆனால் இங்கிலஸ் தனது அளப்பனவை முடிக்கும்வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அவருக்கு இன்னும் 3 மணித்தியாலங்கள் தேவைப்பட்டன.
கிட்டத்தட்ட காலை 11:30 மணிக்கு நாங்கள் புறப்பட்டபொழுது காற்று கிளம்பி வீசியது. கடல் கொந்தளித்தது. கடற்கலத் தலைவர் எங்கள் பாதுகாப்பை எண்ணிப் பதைபதைத்தார். செரந்தீப் (ளுநசநனெiடி) எனப்பட்ட எமது கடற்கலம் துறைமுக ஓடமாகவே உருவாக்கப்பட்டது. அந்த ஒடுங்கி, நீண்ட ஓடம் கனத்த முகப்புக் கொண்டது. அன்று நாங்கள் கண்ட கடலுக்கு
அது சற்றும் உகந்ததல்ல.
நாங்கள் நெடுந்தீவுக்குப் புறப்படுவதே நல்லதென்று நான் முடிவுசெய்தேன். நெடுந்தீவின் தென்புறத்தை நோக்கிச் சென்றால், காற்றின் தாக்கத்திலிருந்து தப்பிவிடலாம். அதன்படி கடல் அலையின் திசைக்கு 90 பாகை எதிர்த்திசையில் பயணித்து, மாலை 2:16 மணியளவில் நெடுந்தீவை அடைந்தோம். நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, கடல் மிகவும் அமைதியாகவே இருந்தது. எனினும் மாரிகாலத்தில் இத்தகைய திடீர்த் திருப்பங்கள் எதிர்பார்க்கத்தக்கவையே. என்னென்ன எல்லாமோ நடந்தும் இருக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.
நன்றி – தாய்வீடு (பெப்ரவரி 2023)