திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளார் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இன்று(நவம்பர் 19) உயிரிழந்தார். சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தவராவார்.
தடுப்பில் இருந்த இவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரும் இன்னொருவரும் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக விடுவிக்கப்படவும் இல்லை, நீதிமன்றில் முற்படுத்தப்படவுமில்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
சந்தேகநபரது தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
அதன்பின்னர் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படுவுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அந்தப் பிரதேச மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.