இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற தீர்மானம் எட்டப்படும் எனக் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பு செயலாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (ஜனவரி 01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் இலங்கை அரசாங்கத்தின் உணவு அதிகரிப்பு திட்டத்தின் அறிவுறுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்கு அமைவாகத் தரிசாக இருந்த நிலங்கள் அனைத்துச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் வரவேற்கத்தக்கது.
இவ்வாறானநிலையில் மேய்ச்சல் தரவை இல்லாது சவால்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக பெரும் பண்ணைகளை வைத்துள்ள பண்ணையாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. அவற்றுக்கான மேய்ச்சல் தரை இன்று வரை ஒதுக்கப்படவில்லை.
வர்த்தமானி மூலம் மேய்ச்சல் தரவையை அறிவித்து அபிவிருத்தி செய்வதற்குக் குறிப்பிட்ட காலம் எடுக்கும்.
தற்போது இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகத் தற்காலிகமாக வன இலாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மேய்ப்பதற்கான அனுமதியை மாவட்ட அபிவிருத்தி குழு வழங்கி இருக்கின்றது.
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற தீர்மானம் எட்டப்படும்.
அதன் பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும். மேய்ச்சல் தரவை என்பதற்குள் புல், நீர், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அதற்குள் அடங்கியிருக்கும்.
இவ்வாண்டு குறித்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.