அனலைதீவு இறங்குதுறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த வேலைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை பயணிகள் படகு நீண்டகாலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன், ஒருவர் தவறி விழுந்தமையினால் கால் எலும்பும் முறிந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே தற்போது அமைச்சரின் முயற்சியினால் இன்று (ஜூலை 19) குறித்த படகு அப்புறப்படுத்தப்பட்டு திருத்த பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தீவுப் பகுதிகளுக்கான கட்டிட நிர்மாணப் பொருட்களை எடுத்துச் செல்வதில் காணப்படும் இன்னல்கள் தொடர்பில் பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், தீவகங்களுக்கு இடையில் பொருட்களை எடுத்துச் செல்வதை இலகுபடுத்தும் வகையில் மிதக்கும் பாதைகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.