சுமார் 86 கோடி ரூபா பெறுமதியான அபின் போதைப்பொருள் வடக்கு மாகாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. பெருந்தொகை அபின் போதைப்பொருள் வடக்கில் கைப்பற்றப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும்.
பருத்தித்துறை கற்கோவளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோ அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 28 கிலோ கேரளக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. பொதி செய்யப்பட்ட நிலையில் இவை நிலத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று பருத்தித்துறைப் பொலிஸ் நிலையபா் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க “யாழ்நாதத்துக்கு” தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 86 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 45 லட்சம் ரூபா என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது நாடளாவியரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவின்பேரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்கொள்ளப்படும் திடீர் சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையில் அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.