யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.
சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பிய ஒருவர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 25ஆம் திகதிவரை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் அவர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மீள மாற்றப்பட்டிருந்தார்.
அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.