பல அழகிய வர்ணங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு வானவில்லைப் போல, பன்முகத் திறமைகளை ஒருங்கே கொண்ட சிறப்புக்குரியவர்கள் மிக அரிதாகவே பிறக்கிறார்கள்.
தேசம் போற்றும் சிறப்புமிக்க பெரியவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் என்று பல ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட பெருந் தீவாம் நெடுந்தீவின் இன்னொரு தவப்புதல்வனாகப் பார்த்திபன் மகேசு அவர்களைக் காண்கிறோம்.
உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய செல்லத்தம்பி மகேசு அவர்களுக்கும் ஆசிரியையாகப் பணி தொடர்ந்த திருமதி. வேதநாயகி மகேசு அவர்களுக்கும் தலை மகனாகப் பிறந்தவர், பார்த்திபன்.
உடன் பிறப்புகளான மைதிலி, பிரதீபன், ஹேமமாலதி, அமரர் உமாபாரதி ஆகியோருடன் மனைவி தர்மினி. அன்புக் குழந்தைகள் ஆரணன், மிகிரன் இவர்களுடன் சேர்ந்து பாசமும், ஒற்றுமையும், படரக் கல்வியறிவும் ஒருங்கே மலர்ந்து மணம் வீசும் குடும்பத்தில் மகிழ்ந்திருந்த நாள்கள் மகத்துவமானவை.
மென்மையான பேச்சும் கலைத்திறனால் விளைந்த சிறப்புக்களும் சிறுவயதில் இருந்தே ஒரு பண்பாளனாகப் பலரதும் மனங்கவர் கல்வியாளனாக அவரைத் திகழச் செய்தன.
ஆசிரியர்களான பெற்றோரின் இடமாற்றங்களுக்கு ஏற்ப ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயம், வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் கோப்பாய் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பயின்றார். இடைநிலைக் கல்வியுடன் க.பொ.த. உயர்தரம் வரையான கல்வியைப் யாழ். கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார்.
சித்திர சிற்ப ஆக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞனான பார்த்திபனை அறிந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகம் அவருக்கு 1992ல் கல்லூரியின் சித்திர ஆசிரியராக நியமனம் வழங்கிப்பெருமை பெற்றது. தொடர்ந்து தனது கலைப்பணியைச் சிறப்பாக்கும் வகையில் பிரபல சித்திரப்பாடப் பயிற்று விப்பாளரும் விரிவுரையாளருமான திரு. சண்முகராஜா அவர்களிடம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சித்திரப்பாட விசேட பயிற்சியைப்பெற்றார்.
பல்கலைத் திறமைகளையும் தொழில்நுட்ப நுண்ணறிவையும் ஒருங்கே பெற்றிருந்த, அவருடைய சிற்பக்கலை அவரை அசாதாரணமான ஒரு தனிச் சிறப்புவாய்ந்த மனிதராக உயர்த்தியது. மிகச் சிறிய வயதிலேயே பெருமைமிக்க சாதனையாளராக இவருடைய சிற்பக்கலை மேன்மை இவரை இனம் காட்டியது. 1994-ல் வடக்கு கிழக்கு மாகாணக்கலை பண்பாட்டுத் திணைக்கள அனுசரணையுடன் இவரால் ஆக்கப்பட்ட சவர்க்காரச் சிற்பங்களின் கண்காட்சி திருகோணமலையில் இடம் பெற்றது. தொடர்ந்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் காட்சிப்படுத்தப்பட்ட சித்திர சிற்ப ஆக்கங்களால் கலைத்துறை ஆர்வம் மிகுந்த பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கடும் உழைப்பும் திட்டமிடும் விவேகமும் இவரைத் தனித்துவம் மிக்க கலைஞராக வெளிக்கொணர்ந்தன. இவருடைய குறிப்பிடத் தக்க பெரு முயற்சிகளாக இன்றும் துலங்கும் அவரது படைப்புகள் அவரின் புகழ் பேசும் வண்ணம் ஆங்காங்கே ஒளிர்கின்றன.
நெடுந்தீவு பிரதேச செயலக முன்றலில் முருகைக்கல்லினால் ஆக்கப்பட்ட இரண்டு குதிரைகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத் தாதியர் பயிற்சிக் கல்லூரி உள்ளரங்கில் நிறுவப்பட்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வெண்ணிற உருவச்சிலை. தாதியர்களின் பயனுறுதியைப் பறை சாற்றி நிற்கின்றது.
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நிறுவப்பட்ட விபுலானந்தர் சிலை.
நெடுந்தீவு தென்னிந்தியத் திருச்சபை ஆலயத்தின் புதிய வாயிற் கதவுகளில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப வேலைகள். நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் சீ.வீ.ஈ. நவரத்தினசிங்கம் அவர்களின் வெண் கல உருவச்சிலை என்பனவும்,
நெடுந்தீவு கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்டுப் பல வருடங்களாகப் பாடசாலை மாணவரின் விளையாட்டுப் பொருளாக இருந்த மிதவைக் கோளம் புவியியற் பாட உபகரணமாகி உலகக் கோளமாக உருப்பெற்று மகாவித்தியாலய அதிபரின் அறை வாசலில் இன்றும் அழகுற நிலைபெற்றுள்ளது.
யாழ். தென் இந்திய திருச்சபை ஆதீன பேராயர் வணக்கத்துக்குரிய எஸ். டானியல் தியாகராசா அவர்களால் இந்தக் குறுகிய வயதில் சிற்பக்கலா வினோதன் எனும் சிறப்பு விருதையும், யாழ். எம்.ஜி.ஆர் மன்றத்தினரின் பாராட்டுகளுடன் கலைமாமணி விருதினையும் பெற்றிருந்தார். இவற்றோடு இளங்கலைஞர் விருதினையும் பல்நிலைப் போட்டிகளில் பங்கு கொண்டு பெற்ற சான்றிதழ்களால் தரம் மிக்க சித்திரக் கலைஞன் என்ற புகழ் நாமத்தையும்பெற்றிருந்தார்.
நெடுந்தீவு கனடா மக்களின் அழைப்பின்பேரில் 2019ல் கனடாவுக்கு வருகை தந்தவர். கனடாவில் வளர்ந்த இளையோரைச் சித்திர, சிற்பக்கலை ஆற்றல்களில் மேம்பட ஊக்குவிக்கும் செயற்பாடுகளைத் திட்டமிட்டு, மாதிரிப் பயிற்சிக் கருத்தரங்குகளையும் நடத்தியிருந்தார்.
தன்னுடைய தனிமைத் துயரையும்கூட, காணும் பொருளையெல்லாம் கலைவடிவாக்கிச் சென்ற இடமெல்லாம் சித்திரமும் சிறபங்களும் செய்து சேர்ந்தோர்களிப்புறச் சிறந்தார். தன் குடும்பம் மனைவி பிள்ளைகளில் அளவற்ற அன்பும் நேசமும் கொண்டு புலம்பெயர் தேசத்தில் அவர்கள் நலன்களுக்காகக் கடுமையான உழைப்பு மூலம் பொருளீட்டலில் ஆர்வம் கொண்டு அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
உள்ளத்திலே அன்பு மடைதிறந்த வெள்ளமாய்ப் பெருகித் தோன்ற மற்றவர்கள் பலருக்கு அவரோடு பழகும் ஆர்வம் உண்டாகும் வண்ணம் நட்பு என்கிற பிணைப்பைதாமாக வந்து சேரும் வகை தேர்ந்த புன்னகையாலும் பொருட்செறிவுணர்த்தும் பேச்சாலும் நல்லதொரு மனிதரான பாபுவுக்கு அமைந்த நண்பர்கள் பற்றி எண்ணும்போது அளவற்ற மகிழ்வு பிறக்கிறது.
அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் பழகியோர் இன்று அவரை இழந்து தவிக்கின்றபோது உரைக்கின்ற ஆற்றாமையின் துயர வார்த்தைகள் அவரது நட்புக்குச் சான்றாகும்.
எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்.
நாம் அறியா வகையில் உலகெங்கும் ஒளிரும் அவரது கலைப்படைப்புகள் பலவும் அவரின் மறைவு கேட்ட மாத்திரத்தே அறிந்தோரால் வெளிக்கொணரப்படுவதை அவதானிக்கின்றோம். திடீர் மறைவால் எம்மைத் திகைக்க வைக்கும் வரை வெகு சாதாரணமான ஒருவராக நம்மிடையே நடமாடினார் என்பது உண்மை . அவருடைய இருப்பு நீடித்திருப்பின் இன்னமும் ஏராளமான கலைத்துவப்படைப்புகளை உலகிற்கு அள்ளி வழங்கி இருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை .
குறுகிய கால வாழ்வில் எமது அன்பினைத் தன் பண்பால் ஆட்கொண்டு மறைந்த பாபு என்ற கலைஞன் பார்த்திபன் அவர்களின் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கிறோம்.
(நன்றி தாய்வீடு)