பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது. சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.