இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட உறவினர்கள் உட்பட 7 பேரும் வர்த்தக நிலையங்கள் இரண்டின் உரிமையாளர்கள் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றியவர் என காலி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் விடுமுறை பெற்று கடந்த 5ஆம் திகதி தங்காலை வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பல நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து அவர் பயணம் செய்த பிரதேசத்தில் இருந்த நபர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.