இலங்கையில் ஜனநாயகம், மனிதாபிமானம், பொருளாதாரம், வாழ்வாதாரம், வேலை வாய்ப்புக்கள், வேதனங்கள் அதிகரிக்கின்றதோ இல்லையோ பிறப்புக்கள் மட்டும் அதிகரித்து நாடு சனத்தொகையில் முன்னேற்றம் கண்டு வந்த நிலையில், நாட்டில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து பிறப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆககாணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2013ஆம் ஆண்டு ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் சராசரி வருடாந்த சனத்தொகை வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, இறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், இந்த மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கான காரணம்க ண்டறியப்படவில்லை. மேலும் நாட்டில் கொரோனா தொற்று பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகை 1950 ஆம் ஆண்டளவில் சுமார் 200 கோடியாக இருந்த நிலையில், கடந்த 73 ஆண்டுகளில் அது 804 கோடி 53 இலட்சமாக அதிகரித்துள்ளது. இலங்கை யில் 1950 ஆம் ஆண்டில் 79 இலட்சத்து 45. 977 ஆக இருந்த மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் 2 கோடியே 18 இலட்சத்து 93579 ஆக அதிகரித்து. மக்கள் தொகை பட்டியலில் இலங்கை முன்னேறிய நிலையிலேயே தற்போது பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
பிறப்புக்கள் குறைய காரணம் என்ன?
இலங்கையில் 2023 ஜூலை 1 நிலவரப்படி மொத்தம் 268,920 பிறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 இல் மொத்தம் 275,321 பிறப்புகள் பதிவாகியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 2014 ஆம் ஆண்டிலிருந்து பிறப்பு வீதங்கள் தொடர்ச்சியாக குறைந்துள்ள போதிலும், 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா தொற்று நோயும் அதன் விளைவாக ஒவ்வொருவரும் தமக்கு தாமே அமுல் படுத்திக்கொண்ட “இடைவெளி” பேணலும்உள்ளன.
அத்துடன் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள், உலகளாவிய தொற்று நோய்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கள், வேலைவாய்ப்பின்மைகள், நாட்டிலிருந்து வெளியேறல், மற்றும் அதிகரித்த வரி விதிப்புக்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற முடிவில் பலர் இருப்பதால் பிறப்பு எண்ணிக்கை குறை வடைகின்றது. இலங்கையில் கொரோனாவிற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், இருப்பிடம், வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள், நெருக்கடிகள், சுற்று சூழல் அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வங்குரோத்து அடைந்துள்ள நாடு என்ற நிலைமைகளும் பிறப்பு வீதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. குறைந்த இடவசதி, நகரங்களில் சிறுவர் பராமரிப்பு வசதிகள் குறைவு, நகரப்புற தம்பதிகளின் குழந்தை வளர்ப்புக்கு உதவக்கூடிய குடும்ப உறவினர்கள் வெகு தொலைவில் உள்ளமை ஆகியனவும் பிறப்பு வீதம் குறைவடைவதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகள், வறுமை, விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை இலங்கையை வதைக்கின்றன. இதற்கும் மேலாக காலநிலை மாற்றத்தின் காரணமாக வாழ்விடங்கள் சுருங்கிக் கொண்டு வருகின்றன. காடுகள், வயல் நிலங்கள் அழிக்கப்படுகின்றன, இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. உணவு உற்பத்தியின் அளவு போதுமானதாக இல்லை. திருமண வாழ்க்கையைத் தொடங்க நிறைய நிதி ஆதாரங்கள் தேவைப்படுவதால், திருமணம் செய்யாமல் தனியாக வாழும் போக்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருவதும் பிறப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது. அத்துடன் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு சமூக ஒழுங்குகெடும் நிலைமையுள்ள நாட்டில் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு மக்கள் விரும்பாமையும் காரணமாகவுள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்க கணவன், மனைவி இருவரும் பணியில் உள்ளதால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகள் துணியாமை, பொதுவாக கர்ப்பம் கொள்ளு தலை உணர்ச்சி வசப்பட்டு அணுகாமல் மன முதிர்ச்சியுடன் அணுகுவது திருமணம் ஆகும் வயது, பொதுவாக அதிகம் பெண்கள் 30-35 ஆண்கள் 35 – 40. இந்நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட பேறு என்பதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளமை.1950 களில் ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்நாளில் கிட்டதட்ட 4-7 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் தற்போது பெண்கள் வேலைகளுக்கு செல்வதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நன்கு படித்து பின்னர் வேலைக்குச் செல்லும் பெண்கள், குறைவான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர்.
அத்துடன் விவாகரத்து விகிதம் இலங்கையில் அதிகமாகவுள்ளமை. தொழிலுக்காக கணவர்கள் பல வருடங்களாக வெளிநாடுகளில் உள்ளமை போன்றவையும் காரணிகளாகவுள்ளன. இதேவேளை நாட்டில் திருமண வீதம் குறைவடைவதனால் பிறப்பு வீதமும் படிப்படியாக குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழ கத்தின் சமூக விஞ்ஞான பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவிகின்றார்.
தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம் என்பதனால் பிறப்புக்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது என்றும் அடுத்த 10 ஆண்டுகளில் சனத்தொகையில் இன்னும் கணிசமான குறைவைக் காண முடியும் எனவும் அவர் கூறுகின்றார்
இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இலங்கையை பொறுத்தவரை, தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைகளை விட தொற்றா நோய்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகின்றது. தொற்றா நோய்களான நீரிழிவு. உயர்குருதி அமுக்கம், இருதய நோய், புற்று நோய், சிறுநீரக நோய், வலிப்பு. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் இது போன்ற பல்வேறு தொற்றா நோய்களால் ஆண்டொன்றுக்கு இறப்போர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டின் தரவுகளின்படி தொற்றா நோய்களால் ஏற்பட்ட இறப்புக்கள், மொத்த இறப்புக்களின் 81 வீதமாக காணப்பட்டதோடு. இது தெற்காசியாவின் ஏனைய நாடுகளை விட மிக வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வு கள் கூறுகின்றன.
நாட்டில் முதியோர் தொகை அதிகரிப்பும் முக்கிய பிரச்சினையாக அமைகின்றது. நாட்டின் சனத்தொகையில் 20 வீதத்தினர் 60 வயதிலும் கூடியவர்களாக உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகையில் காணப்படும் அதிகரித்த வளர்ச்சி, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார கட்டமைப்பின் நிலை என்பன இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாரிய பங்களிப்பு செய்வதோடு. முதியோர்களின் எண்ணிக்கையில் காணப்படும் அதீத அதிகரிப்பு. அவர்களின் பராமரிப்பு முறைமை, அவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தில் வசிக்கும் நிலை, கிராமத்தில் காணப்படும் சுகாதார நிலை என்பனவும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாகின்றன .
அத்துடன் ஒவ்வொரு 5 விநாடிக்கும் 14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் தடுக்கக்கூடிய காரணங்களால் தாம் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழக்கின்றன என்பதுதான். மிகவும் எளிய தீர்வுகளான தூய தண்ணீர், ஊட்டச்சத்து, தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், அடிப்படை மருத்துவ சேவை, மின்சார வசதி ஆகியவை எளிதில் கிடைத்துவிட்டாலே குழந்தை இறப்பு விவகாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவத்துறை நிபுணர்கள். ஆனால் இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிக்க இவ்வசதிகள் அடித்தட்டு மக்களுக்கு பெருமளவில் கிடைக்காமையும் பிரதான காரணமாகவுள்ளது. அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது
நன்மையா, தீமையா?
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவது நன்மையா, தீமையா என்று பார்த்தால் பிறப்பு எண்ணிக்கை குறைகின்றமை சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். உணவு உற்பத்தி குறையும், வாழிடத் தேவை குறையும், மக்கள் தொகை அடர்த்தி குறையும். அதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழவேண்டிய நெருக்கடியான நிலை மாறும், கரிம வெளியீடு குறையும், இவற்றோடு சேர்த்துப் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். வேலையில்லா பிரச்சினைகள், உணவுத்தட்டுப்பாடுகள் எழாது என்பவற்றை நன்மைகளாக குறிப்பிட முடியும்.
அதேவேளை, பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால் ஏற்படும் தீமைகளாக இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் வயதானவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் யார் வரி கட்டுவது? வயதானவர்களின் மருத்து வச் செலவுகளை யார் கவனித்துக் கொள்வது? அவர்களை யார் பார்த்துக்கொள்வது? என்ற பிரச்சினைகள்,மக்கள் தொகை குறைவால் உற்பத்தி பாதிப்பு, உழைக்கும் திறனுள்ள வய திலுள்ளவர்களின் விகிதம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தல், பிறப்பு விகித குறைவால் தொழி லாளர்கள் எண்ணிக்கை குறைதல், குறைந்த பட்ச உழைக்கும் மக்களையும் மிகக் குறைந்த வரி கட்டுவோரையும் கொண்ட பொருளாதார நெருக்கடி நிறைந்த சமுதாயம் உருவாதல் என் பவற்றை குறிப்பிட முடியும்
(நன்றி தினக்குரல்)